Random image

இயக்குநர் மீது நடிகை நிஷா பாலியல் புகார்

சீரியல் இயக்குநர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மலையாள சின்னத்திரை நடிகை நிஷா சாரங் புகார் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகை நிஷா சாரங். இவர்,போத்தன் வாவா, மைபாஸ் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது ‘உப்பும் மிளகாயும்’ என்ற மலையாள காமெடி தொடரில நீலிமா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தொடரை இயக்கும் இயக்குநர் உன்னி கிருஷ்ணன் தனக்கு பாலியல் தொல்லை தந்ததாக நிஷா கூறியுள்ளார்.

இதுகுறித்து நடிகை நிஷா , ‘இயக்குநர் உன்னி கிருஷ்ணன் படப்பிடிப்பு தளங்களில் எனக்கு அடிக்கடி பாலியல் தொல்லை தந்து வந்தார். என்னை பலமுறை படுக்கைக்கு அழைத்தார். நான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தேன். எதிர்ப்பை மீறியும் படப்பிடிப்பின்போது என்னிடம் அவர் தகாத முறையில் நடக்க முயன்றார்” என்றார்.

மேலும், ‘இயக்குநர் உன்னி கிருஷ்ணனின் செயல் குறித்து தொலைக்காட்சி நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக்கூறியும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் உப்பும் மிளகாயும் தொடரிலிருந்து விலகினேன்.  இயக்குநரை அத்தொடரிலிருந்து நீக்காவிட்டால் நான் அந்த தொடரில் நடிக்கப்போவதில்லை என தொலைக்காட்சி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறேன்’ என்றார் நிஷா.

நடிகை நிஷாவுக்கு மலையாள பெண்கள் திரைக்கலைஞர்கள் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து இருக்கிறது.  இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 90-ஆவது ஆண்டு கொண்டாடும் மலையாள சினிமாவில் இதுபோன்ற நிகழ்வு மிகவும் கவலை அளிக்கிறது.  நிஷா அளித்துள்ள புகாரின்மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற பிரச்னைகள் திரைப்பட துறையில் மட்டும் இல்லாமல் மற்ற துறைகளிலும் களையப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.