பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, போதைப்பொருள் கும்பலுடன் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நடிகை ரியா, அவரது தம்பி ஷோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர், வேலைக் காரர் மற்றும் போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் என 12-க்கும் மேற்பட்டவர்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கைதான ரியா உள்ளிட்டோர் கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகைகள் ரகுல் பிரீத் சிங், சாரா அலி கான், தீபிகா படுகோன், ஷிரத்தா கபூர் ஆகிய 4 பேருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் (என்சிபி) நேற்று சம்மன் அனுப்பியுள்ளனர். 4 பேரையும் வரும் 26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மனில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா, தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டியில் :-

சில ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண சென்றிருந்தேன். போட்டி முடிந்த பின்னர், அங்கு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த விருந்தில் பிரபல கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மனைவிகளுடன் கலந்து கொண்டனர்.

விருந்துக்கு நடுவே, அங்கிருந்த குளியலறைக்கு நான் சென்றேன். அப்போது, கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் ‘கொக்கைன்’ எனப்படும் போதைப் பொருளை பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு எனக்கு சம்மன் அனுப்பினால், அவர்களுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார் .