அதானி நிறுவனத்தின் திடீர் மின் கட்டண உயர்வு: மும்பை புறநகர் மக்கள் அதிர்ச்சி

மும்பை:

தானி எலக்ட்ரிசிட்டி மும்பை லிமிடெட் நிறுவனம், மும்பை புறநகர் பகுதியிலுள்ள சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் வழங்கி வருகிறது. இந்த நிலையில், தற்போது, மாதாந்திர மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் ஒருங்கிணைந்த வணிக மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் சில்லறை விநியோகத்தை வாங்கியதன் மூலம், அதானி குழுமத்தின் கிளையான அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட், மகாராஷ்டிராவின் சில்லறை மின்சக்தி வியாபாரத்தில் நுழைந்தது.

இந்த நிலையில், திடீரென மின்சார கட்டணத்தை அதானி நிறுவனம் உயர்த்தி உள்ளது. மும்பை புறநகர்களில் ஏற்கனவே அமலில் இருந்த மின் கட்டணத்தில் , யூனிட்டுக்கு  40 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் உயர்த்தி உள்ளது. இது மக்களிடையே கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சாமானிய மக்களின் மாதாந்திர செலவு பன்மடங்கு உயர்ந்து உள்ளது. இந்த திடீர் மின் கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், மின் கட்டண உயர்வு குறித்து அதானி நிறுவன  அதிகாரிகள் மகாராஷ்டிரா மின்சாரம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் (MERC) விளக்கம் தெரிவித்துள்ளதில், கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், இது  0.28 சதவிகிதம் மட்டுமே என்று கூறி உள்ளனர்.

அதானி நிறுவனத்தின் இந்த திடீர் மின் கட்டண உயர்வுக்கு, மும்பை புறநர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அதானி நிறுவனம் இதற்கான விளக்கம் அளிக்க கோரி சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதையடுத்து, அதானி நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தில், மின் கட்டண உயர்வு வெறும் வதந்திகள் என்று பதில் அளித்தது. மேலும், அதானி மின்சார மையம் தெளிவான மற்றும் வெளிப்படையான முறையிலேயே தங்களுது வாடிக்கையாளர்களை அணுகுவதாகவும் தெரிவித்து உள்ளது.

ஆனால், அதற்கு பதில் கூறியுள்ள மக்கள்,  மின் கட்டண உயர்வு என்பது வதந்தி அல்ல அது உண்மையானது என்று தங்களது பழைய மின் கட்டணம் மற்றும் புதிய மின் கட்டணம் குறித்து சமூக வளைதளங்களில் பகிர்ந்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.