விமான நிலையங்களை பொறுப்பில் எடுக்க கால அவகாசம் கோரும் அதானி குழுமம்!

அகமதாபாத்: கடந்தாண்டு தான் ஏலத்தில் எடுத்த மங்களூரு, லக்னோ மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களை உடனடியாக பொறுப்பில் எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது அதானி குழுமம்.

அதானி குழுமத்தின் இந்த ‍அறிவிப்பு, விமான நிலையங்களை விரைந்து தனியார் மயமாக்கத் துடிக்கும் மோடி அரசின் திட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தாண்டு நடைபெற்ற ஏலத்தில், கடும் போட்டிக்கு இடையே மேற்கண்ட விமான நிலையங்களை ஏலம் எடுத்தது அதானி குழுமம்.

ஆனால், தற்போது கொரோனா வைரஸ் முடக்கத்தால், விமானப் போக்குவரத்தில் நிச்சயமற்ற சூழல் நிலவும் காரணத்தால், தாங்கள் ஏலத்தில் எடுத்த விமான நிலையங்களை பொறுப்பேற்று நடத்துவதற்கு கு‍றைந்தபட்சம் 6 மாதகால அவகாசம் கேட்டுள்ளது அதானி குழுமம். இதுதொடர்பாக, ஏர்போர்ட் அதாரிட்டி ஆஃப் இந்தியாவிற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 15ம் தேதி, அகமதாபாத், மங்களூரு மற்றும் லக்னோ விமான நிலையங்களை ஏற்பது தொடர்பான ஒப்புதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது அதானி குழுமம். அந்த ஒப்பந்தப்படி, முன்பணமாக ரூ.1500 கோடி செலுத்திய 180 நாட்களுக்குள் பொறுப்பில் எடுத்துக்கொள்ள வ‍ேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.