சென்னை:

சென்னையில் நாளை முதல் கூடுதலாக 90 மின்சார ரெயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, மொத்த ரெயில் சேவைகளின் எண்ணிக்கை 500-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக அத்தியாவசிய பணியாளர்களுக்காக சென்னையில் புறநகர் மின்சார ரெயில்கள் முதலில் இயக்கப்பட்டது. இதற்காக முதலில் 120 மின்சார மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்தது. பின்னர் 150-ஆக அதிகரிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 320 மின்சார ரெயில்சேவையாக அதிகரிக்கப்பட்டு, நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பெண்கள், குழந்தைகள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் பெண்கள், குழந்தைகள் எந்த நேரத்திலும் மின்சார ரெயிலில் பயணம் செய்யலாம் என அறிவித்து, 410 மின்சார ரெயில் சேவைகளாக தெற்கு ரெயில்வே அதிகரித்தது.

அதன்பின்னர் பொதுமக்களும் குறிப்பிட்ட நேரங்களில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால், மின்சார ரெயில் சேவைகளை தெற்கு ரெயில்வே மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, நாளை (திங்கட்கிழமை) முதல் கூடுதலாக 90 மின்சார ரெயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, மொத்த ரெயில் சேவைகளின் எண்ணிக்கை 500-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 80 சதவீத மின்சார ரெயில் சேவைகள் சென்னையில் தொடங்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.