‘சர்கார்’ படத்துக்கு கூடுதல் கட்டணம்: நீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் பதில்

மதுரை:

‘சர்கார்’ படத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதை மீறி  கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், மதுரை ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இதுகுறித்து தியேட்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது என்று தெரிவித்துஉள்ளது.

‘சர்கார்’ உள்பட எந்தவொரு படத்துக்கும் படம் வெளியாகும் அன்று  கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்து தியேட்டர்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், நீதி மன்றம் உத்தரவிட்டும், தீபாவளிக்கு வெளியான விஜயின் சர்க்கார் படத்துக்கு,  கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.  பல தியேட்டர்களில் சர்க்கார் படத்தின் டிக்கெட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டதாகவும், அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு அதிகமாகவே தியேட்டர்களில் டிக்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இதுகுறித்து நீதிமன்றத்தில் மனுதார் முறையிட்டிருந்தார். அப்போது,  நீதிமன்றத்தின் உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை. ஆகவே, அது தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுதாரர் நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு வழக்கை  நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணை நடை பெற்று வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  `சர்கார்’ படத்துக்கு  கூடுதல் கட்டணம் வசூலித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி வழக்கை டிசம்பர் 6ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை ஆட்சியர் தலைமை யில்  பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இதுகுறித்து சர்க்கார் படம் வெளியான தியேட்டர் களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்களின் பதில் கிடைத்ததும் நீதிமன்ற்ததில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.