என்பிஆருக்கு எதிராக கைகோர்த்த நிதிஷ், தேஜஸ்வி: பீகார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

பாட்னா: தேசிய மக்கள்தொகை பதிவேட்டு படிவங்களிலிருந்து சர்ச்சைக்குரிய உட்பிரிவுகளை கைவிடுமாறு மத்திய அரசை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வலியுறுத்தி இருக்கிறார். அதற்கான தீர்மானமும் சட்டசபையில் நிறைவேறியது.

பீகார் மாநில சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, என்ஆர்சி திட்டத்தை அமல்படுத்த மாட்டோம், என்பிஆர் திட்டத்தை 2010ம் ஆண்டு ஷரத்து படியே அமல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவையில் பேசிய முதலமைச்சர் நிதிஷ்குமார், கூடுதல் உட்பிரிவுகளை” கைவிடுமாறு கேட்டு மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளேன்.

2010ல் பயன்படுத்தப்பட்டவையே மீட்டெடுக்கப்பட வேண்டும். புதிய, மாற்றப்பட்ட என்ஆர்சி மூலம் மக்களை குறிவைக்க ஒரு அடிப்படையாக பயன்படுத்தப்படலாம் என்று பேசினார்.

மேலும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தையும் அவையில் அவர் படித்துக் காட்டினார். திருநங்கைகளும் இதில் சேர்க்க வேண்டும் என்று தாம் வலியுறுத்தியதாகவும் கூறினார். பீகாரில் என்.ஆர்.சி இருக்காது என்றும் நிதிஷ் குமார் மீண்டும் வலியுறுத்தினார்.

விவாதத்திற்குப் பிறகு, தேஜஸ்வி யாதவ் மற்றும் மற்ற ராஷ்டிர ஜனதா தளம் எம்எல்ஏக்கள் முதலமைச்சர் நிதிஷ் குமாரை சந்திக்கச் சென்றனர். அதன்பிறகு முதலமைச்சர் சபாநாயகரை அழைத்து மதிய உணவுக்கு பிறகு இந்த விஷயத்தை மீண்டும் எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்தாண்டு பிற்பகுதியில் பீகாரில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. அதை முன் வைத்து இதுவரை எதிர்த்து வந்த சிஏஏ ஆதரவு நிலையை அவர் மாற்றிக் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது.