நெட்டிசன்:

கா.திருத்தணிகாசலம் (Ka Thiruthanikasalam)  அவர்களின் முகநூல் பதிவு:

தமிழக கூடுதல் டி.ஜி.பி. சஞ்சீவ்குமார் உடல் நலக்குறைவால் இறந்தார்.

அவரது மறைவு குறித்து பல்வேறு உருக்கமான தகவல்கள் காக்கிச்சட்டை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த இவர் 1986 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியாவார். திருநெல்வேலியில் கமிஷனராகவும், உளவுத்துறையில் டி.ஐ.ஜி, ஐ.ஜி என்று பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இவர் பதவி வகித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து பதவி உயர்வில் காவல்துறை தலைமையிட கூடுதல் டி.ஜி.பி -யாக பதவி வகித்தார். பணியில் நேர்மையாக இருந்து, இவரது பணிக்காலங்களில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். குறுக்கு வழியில் பொருள் ஈட்டாத, கடமை தவறாத நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்தவருக்கு புற்றுநோய் வந்துள்ளது.

சஞ்சீவ் குமார் ஐ.பி.எஸ்.

கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயுடன் போரடிய இவர், நோயை குணப்படுத்துவதற்காக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். சிகிச்சைக்காக அவரது சேமிப்பு பணத்தை எல்லாம் செலவழித்தும் அவரால் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியவில்லை. மேலும், அவருடைய மருத்துவ பாலிசி லிமிட்டையும் மருத்துவச் செலவு தாண்டிவிட்டது. அதனால், அவர் பொருளாதாரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ளார். அதையடுத்து, இவரது பேட்சில் இருக்கும் சக அதிகாரிகள் சிலர் இவருக்கு பொருளாதார ரீதியாக பல உதவிகள் செய்து வந்திருக்கிறார்கள். இருந்தாலும் மேலும் இவரது சிகிச்சைக்கு கூடுதல் பண உதவி தேவைப்பட்டு இருக்கிறது.

இது போன்ற சிக்கலான சமயங்களில் காவல்துறையில் உயர் அதிகாரிகளுக்கென்று சிறப்பு நிதி திட்டம் மூலம் நிதியுதவியை முதல்வர் வழங்குவார்.இதற்கு விண்ணப்பிக்கும் அதிகாரிகள் உள்துறை செயலாளரிடம் விண்ணப்பிப்பர். அவர் முதன்மைச் செயலாளருக்கு பரிந்துரை செய்வார். முதன்மைச் செயலாளர் முதல்வருக்கு அந்தக்கோப்பை அனுப்பி வைப்பார். முதல்வர் இல்லாத காலங்களில் உள்துறைச் செயலாளரும் , முதன்மைச் செயலாளரும்தான் இதற்கு பொறுப்பு.

கடந்த முறை பழைய டி.ஜி.பி அமித் வர்மாவிற்கும் இது போன்று உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது , முதல்வராக இருந்த ஜெயலலிதா சிறப்பு நிதி ஒன்றில் அவருக்கு உதவி செய்துள்ளார். எனவே அதை நம்பி சஞ்சீவ் குமாரும் அந்த தொகைக்காக விண்ணப்பித்து காத்திருந்தார். இந்தநேரத்தில், முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அதையொட்டி, ஒட்டு மொத்த நிர்வாகமும் முடங்கிப்போக இவரது கோப்பும் அங்கு முடங்கிப் போனது.

உயர் அதிகாரிகள் சிலர் அழுத்தம் கொடுத்தும் கோப்பு நகராமல் இருக்க சஞ்சீவ்குமாருக்கு நோயின் தன்மையும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த சஞ்சீவ்குமார் மேற்கொண்டு அங்கு சிகிச்சை பெறமுடியாமல், அந்த மருத்துவமனையில் இருந்து வெளியேறி வேறு ஒரு சுமாரான மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இடம் பெயர்ந்தார். இடம் பெயர்ந்த சில நாட்களிலே நோயின் தன்மை அதிகரித்து இன்று இவர் காலமானார் . இவருக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் பணிக்காலம் இருக்கிறது.

மக்களுக்கு சஞ்சீவ் குமாரின் மரணம் ஒரு சம்பவத்தை சொல்லிவிட்டு சென்றிருக்கிறது.

உதவியோ ,அன்போ எதுவாக இருந்தாலும் காலத்தில் ஒருவற்கு கிடைத்தால்தான் அது சாலச்சிறந்தது .இல்லையேல் அது வெறும் சம்பவம்தான் . அது சாமானியன் முதல் அதிகாரத்தில் இருக்கும் அனைவருக்கும் பொருந்தும்