அம்பானியைத் தொடர்ந்து, மோடியின் பிரபல நண்பரான அதானியும், இந்திய வணிகத்தை, ஏகபோகமாக கைப்பற்றும் போட்டியில் குதித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக, இந்திய விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முடிவை மேற்கொண்டது மோடி அரசு. ஆனால், அந்த விஷயத்தில் எதிர்பார்த்த வருவாயைவிட குறைவாகவே கிடைத்தது.

மேலும், அந்த விஷயத்தில் குறிப்பிட்ட நிறுவனங்களின் ஏகாதிபத்தியம் ஏற்படும் சூழலே உருவானது. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலேயே பல விமான நிலையங்கள் செல்லும்போது, அங்கே பிறருக்கான கதவுகள் அடைக்கப்படுகின்றன.

விமான நிறுவனங்கள், விமானப் பயணிகள் மற்றும் விமான நிலையத்தில் இதர வணிக நடவடிக்கைகள் மேற்கொள்வோர் ஆகிய யாருக்கும் அது மகிழ்ச்சியான செய்தி அல்ல.

கடந்த 2016ம் ஆண்டு இந்திய டெலிகாம் துறையில், முகேஷ் அம்பானி நுழைந்த பிறகான நிலையைப் பார்க்க வேண்டும். அவர் பல சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்த்தார்.(தொலைதொடர்பு சம்பந்தமான அரசின் கட்டமைப்புகள் அவருக்கு வழங்கப்பட்டன என்பது வேறு விஷயம்).

முகேஷின் வரவுக்குப் பின்னர், இன்று அத்துறையில் அவரையும் சேர்த்து, 2 பிரதானப் போட்டியாளர்களே உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. வோடஃபோன் ஐடியா லிட்., நிலை இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

தகவல் தொடர்பு உள்ளிட்ட பல விஷயங்களில், முகேஷ் கவனம் செலுத்த, துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில்வே பாதைகள், பவர் பிளாண்ட்டுகள்  மற்றும் ஆற்றல் பகிர்ந்தளிப்பு உள்ளிட்டவற்றை அதானி கைப்பற்ற முயல்வதானது நல்ல செய்தி அல்ல.

இதுபோன்ற பெரும் பணக்காரர்களின் கைகளில், தொழில்துறைகள் செல்லும்போது, அங்கே இதர போட்டியாளர்களுக்கான வாய்ப்பு அடைக்கப்படுகிறது. மேலும், இந்திய பொதுத்துறை வங்கிகளில், யாருக்கு கடன் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவும் அரசியல் அதிகார மட்டத்திலிருந்து செல்கிறது.

நாட்டைவிட்டு தப்பிச் சென்ற மோசடி தொழிலதிபர்களுக்கு, இந்திய பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்கியதால், தங்களுடைய மூலதனத்தை, பங்குகளை விற்று பெருக்கிக் கொள்ளும் நெருக்கடியில் இருக்கின்றன  வங்கிகள்.

மேலும், அறிவார்ந்த மற்றும் சரியான முறையில் கொள்கை வகுப்பவர்களும், வலிமையானவர்களுக்கு வழிவிட்டு தங்கள் பதவியை துறந்து விடுகின்றனர். புதிய மற்றும் சிறு நிறுவனங்களை காவு வாங்கவே வரிச் சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வர்த்தகம் மற்றும் அரசுக்கு இடையில் சரியான பங்களிப்பை ஆற்ற வேண்டிய நிலையிலுள்ள நீதிமன்றங்களும், நிலைமையை குழப்பவே செய்கின்றன. மேலும், தற்போதைய நிலையில், சீனாவைப் புறக்கணித்து, சுயசார்பை நோக்கிப் பயணிப்பதாக கோஷம் எழுப்பப்படும் சூழலில், உள்நாட்டு பெரும் முதலாளிகள், உள்ளூர் வாடிக்கையாளர்கள் தலையில் சுமைகளை கட்டவே வழியேற்படுத்துகிறது.

மேலும், கொரோனாவை காரணம் காட்டி, தனது கட்டுப்பாட்டில் மேலும் 3 விமான நிலையங்களைக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதற்கு காலம் தாழ்த்துகிறார் அதானி.

மேலும், கடந்த 2016ம் ஆண்டில் இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவீன திவாலாகும் சட்டம், வலிமையற்ற நபர்களிடமிருந்து உற்பத்தி திறனை, பெரிய முதலாளிகள் கைப்பற்றிக் கொள்வதற்கு வழிசெய்கிறது.

நிலைமை இப்படியெல்லாம் இருக்கையில், போட்டி மிகுந்த ஒரு பொருளாதாரச் சூழலை ஏற்படுத்துவதற்கான சூழல் இன்னுமுள்ளது. அதேசமயம், அரசு தன்னுடைய சொத்துக்களைப் பாதுகாப்பதை உறுதிசெய்ய வேண்டியது அவசியம். இல்லையெனில், பெருமுதலாளிகள் தங்கள் கைகளுக்கு கிடைத்த அனைத்திலும், தங்கள் ஏகபோகத்தை காட்டுவதற்கே முனைவார்கள்.