ராகுல் காந்தி மறுப்பால் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆகிறார்

டில்லி

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்ததால் ராகுல் காந்தி தலைமை பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு அவரது ராஜினாமா முடிவை மாற்றிக் கொள்ள வலியுறுத்தியது. ராகுல் காந்தி தனது முடிவில் பிடிவாதமாக உள்ளார்.

மக்களவையில் எதிர்க்கட்சியாக செயல்பட குறைந்தது 55 இடங்கள் அதாவது 10% தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் சென்ற 2014 ஆம் ஆண்டில் காங்கிரஸ் 44 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றதால் எதிர்க்கட்சி ஆகும் வாய்ப்பை இழந்த்து. இந்த 2019 தேர்தலிலும் 52 இடங்கள் மட்டுமே வென்றதால் இம்முறையும் எதிர்க்கட்சி ஆகும் வாய்ப்பை காங்கிரஸ் மீண்டும் இழந்துள்ளது.

இன்று காங்கிரஸ் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டம் நடந்தது. மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக பொறுப்பு ஏற்க ராகுல் காந்தி மறுத்துள்ளதால் அந்த பதவிக்கு மேற்கு வங்க மாநில மக்களவை உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பெர்ஹாம்பூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஆவார்.