Random image

மகாராஷ்டிராவில் இரவு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி தேவை : ஆதித்ய தாக்கரே

மும்பை

காராஷ்டிர மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களில் டிசம்பர் 31 அன்று இரவு முழுவதும் கொண்டாட்டம் நடைபெற அனுமதி வேண்டும் என சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே கேட்டுக் கொண்டுள்ளார்.

வரும் 31 ஆம் தேதி அன்று நாடெங்கும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கமாகும். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் 31 ஆம் தேதி இரவு முழுவதும் கொண்டாட்டங்கள் நடத்த மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த கொண்டாட்ட தடை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஓட்டல்கள், நடன அரங்குகள், மதுபானக் கூடங்கள் ஆகிய அனைத்துக்கும் விதிக்கப்பட்டுள்ளது.

சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனான ஆதித்ய தாக்கரே சிவசேனாவின் இளைஞர் அணியான யுவ சேனா வின் தலைவர் ஆவார். இவர் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிசுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் ஆதித்யா, “வரும் 31 ஆம் தேதி இரவு முழுவதும் ஓட்டல்கள், விடுதிகள், நடன அரங்குகள் உள்ளிட்ட அனைத்து இடங்களும் திறந்திருக்க அனுமதி அளிக்க வேண்டும்.

இந்த் அனுமதி மும்பை, தனே, நவி மும்பை, புனே மற்றும் அனைத்து பெரிய நகரங்களுக்கும் வழங்க வேண்டும். இதன் மூலம் வேலை வாய்ப்பு மற்றும் அரசுக்கு வருமானம் அதிகரிக்கும். பகலில் சட்டபூர்வமாக உள்ளது இரவில் சட்டவிரோதமாகாது. நாம் நமது மக்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் கடின உழைப்புக்கு இடையில் சிறிது மகிழ்ச்சி அடையச் செய்ய வேண்டும்.
.
கடந்த 2013 ஆம் வருடம் மும்பை பெருநகராட்சி அனைத்து ஓட்டல்களும் கடைகளும் நாள் முழுவதும் திறந்திருக்க தீர்மானம் நிறைவேற்றியது நினைவிருக்கலாம். அந்த தீர்மானத்துக்கும் முதல்வர் தலைமையில் இயங்கும் உள்துறை அனுமதி அளிக்க வேண்டும்.“ என கோரிக்கை விடுத்துள்ளார்.