உத்தரப்பிரதேச (உ.பி.)   தனியார் கல்லூரிகளில்  இல்லவே இல்லாத ‘இடஒதுக்கீட்டை உ.பி. முதல்வர் அதிரடியாய் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார் என்று போலிச் செய்தி பரப்பியதோடு நில்லாமல் இது முதல்வர்  யோகியின் ‘ஊழல் எதிர்ப்பு’ நகர்வு எனவும்,  கடந்த புதன் கிழமையில் இருந்து தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. இட ஒதுகீடு குறித்த அடிப்படை தகவல் கூட தெரியாமல் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்களும் இந்த செய்தியின் உண்மைத்தன்மையை பாராமல் இதனை பரப்பி வருகின்றனர்.


உத்திரப்பிரதேசத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டதிலிருந்து, வலது சாரி பிரச்சாரப் பீரங்கிகள் மற்றும் ஊடகங்களின் பலப் பிரிவுகளும், கடந்த 2014ல் மோடிக்கு செய்தது போலவே ஆதித்யநாத் பிம்பத்தைப் போலிப்பிரச்சாரங்கள் மூலம் செயற்கையாய் கட்டியமைத்து அவர் புகழ் பரப்புவதில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை, சமூக ஊடகங்களில் உத்தரப்பிரதேச மாநில அரசு தனியார் மருத்துவ கல்லூரிகளில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டினை அதிரடியாக ரத்து செய்வதாகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக அவரை வாழ்த்திப் பேஸ்புக் பதிவுகள், ட்வீட் மற்றும் பகடிபடங்கள்( memes) காட்டாற்று வெள்ளமாய் பரவியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களின் ( தகவல்களின் உண்மைகளை ஆராயும் திறனற்ற/பொறுப்பற்ற ) ‘கணிப்பொறி பத்திரிகையாளர்கள்’ மூலம் இந்தக் கதை பிரபலமடைந்தது. அதனைப் பாஜகவின் கண்மூடித்தனமான ஆதரவாளர்கள் மட்டுமின்றி “இடஒதுகீடு குறித்த புரிதலற்ற அரைவேற்காடு முகநூல் பதிவர்களும் ஆர்வத்துடன் பகிர்ந்துக் கொண்டு வருகின்றனர். தமிழில் புதியத் தலைமுறை உள்ளிட்ட சேனல்களும் அதனை வெளியிட்டுத் தங்களது முற்போக்கு முகமூடிகளை கிழித்துக் கொண்டன.

2016 மார்ச் 21 திங்கள் அன்று அம்பேத்கர் நினைவுப் பேருரை நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “அம்பேத்கரே மீண்டும் பிறந்து வந்து இடஒதுக்கீட்டை நீக்கப் போராடினாலும், “இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படாது” எனப் பேசியிருந்தார்.

இந்திய டுடே கட்டுரை:
சமீபக் காலமாகவே இந்தியா டுடே சேனல் மற்றும் வலைத்தளத்தில் பாஜக ஆதரவுச் கருத்துக்கள் திணிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பத்திரிக்கைத் தளத்தில், “”யோகி ஆதித்யநாத் அரசாங்கம் தனியார் மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் ஒதுக்கீடு அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது,” எனச் செய்தியை வெளியிட்டது.


“(உ.பி.) மாநிலத்தின் நலனுக்காகவும் ஊழலை முடிவுக்கு கொண்டுவருவதற்காகவும் உ.பி.யின் முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார்” என்றும் அந்தச் செய்திக்கட்டுரை பச்சையாய் புகழ்ந்துள்ளது.
அந்தச் செய்தி பொய் என்று சமூகவலைத்தளங்களில் பகுத்தறிவாளர்கள் சுட்ட்க்காட்டி, இந்தியா டுடே பத்திரிக்கையைச் சாடியவுடன், அந்தச் செய்தியை நீக்காமல், யோகியின் பெயரை மட்டும் நீக்கிவிட்டு, “உத்தரப் பிரதேச அரசு” என மாற்றியதோடு, “இந்த முடிவை அகிலேஷ் யாதவ் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு எடுத்தது, ஆனால் இப்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பிஜேபி அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ” என்றும் கூறப்பட்டுள்ளது.


பொதுவாய், ஒரு செய்தி வெளியிடும்போது, அந்தச் செய்தியினை வழங்கிய மூலம் யார் என்பதைத் தெரிவிப்பது வழக்கம், அதாவது, அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டதா , அதிகாரிகள், அல்லது மந்திரிகள் பேட்டியளித்தார்களா, என்பதைக் குறிப்பிடும். ஆனால் ‘போலி செய்தி பரப்புபவர்கள் அந்தச் செய்தியின் மூலம்/ஆதாரம் குறித்தான தகவல்களைக் கூறமாட்டார்கள். இந்தியா டுடே ‘ இந்தச் செய்திக்கு எந்தவொரு ஆதாரத்தையும் குறிப்பிடப் வில்லை என்பது அந்தச் சேனலின் முகமூடியை கிழித்து ராஜ் தீப் தேசாய் மற்றும் ராகுல் கன்வால் போன்ற இந்தியா டுடே பத்திரிக்கையாளர்கள் பாஜக-வின் பிரச்சாரகர்களாய் மாறியுள்ளார்கள் என்பதைக்  காட்டுகின்றது.


இந்தியா டுடே மட்டுமின்றி, இதே போன்ற கட்டுரைகள் டைம்ஸ் குரூப்பின் இன்டியாடைம்ஸ் மற்றும் மென்ஸ்எக்ஸ்எப் ( Indiatimes and MensXP) போன்ற வலைத்தளங்களிலும் வெளியாகின., மேலும் இந்திய எக்ஸ்பிரஸ் ‘inth.com, ஜீ குரூப்பின் India.com மற்றும் நியூஸ் நேஷன் போன்ற சேனல்களிலும் வெளியாயின.
இவை எந்த அளவு இந்திய ஊடகத்துறை ஆளும்கட்சிக்கு சேவகம் செய்கின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பிகின்றன. சமீபத்தில் தான் உல்கைலேயே நம்பகத்தன்மையற்ற ஊடகத்துறை கொண்ட நாடுகளில் இரண்டாவது இட்த்தில் இந்திய ஊடகம் உள்ளதாகச் செய்தி வெளியிட்டிருந்தோம்.
எனினும், உ.பி. மாநில மருத்துவ கல்வி நிலைய அதிகாரிகள் இந்தப் போலிச் ‘கதையை’ விரைந்து மறுத்துள்ளனர். “உ.பி.யில், 2006 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறையில் இருந்தே தனியார் துறை மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீட்டு முறை ஒருபோதும் இருந்த்தில்லை. அந்தக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை,” என மருத்துவ கல்வி இயக்குனர் வி.என். திரிபாதி, டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ளப் பேட்டியில் விளக்கமளித்துள்ளார்.

அகிலேச் யாதவ் அரசு, மார்ச் 10 ம் தேதி வெளியிட்ட ஒரு உத்தரவின் படி, 2017ம் ஆண்டிற்கான மருத்துவ முதுகலைப் படிப்புகளுக்கான சேர்க்கை கல்வித் தகுதி-நுழைவு டெஸ்ட் (NEET) தகுதிப் பட்டியலின் அடிப்படையிலேயே இருக்கும் எனச் செய்தி வெளியிட்டுள்ளது.அந்த உத்தரவின் 7 வது பிரிவு “ தனியார் மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், SC, ST மற்றும் OBC பிரிவின் மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கான எந்தவொரு இட ஒதுக்கீடும் சேர்க்கை நடைமுறையில் இல்லை” என்று கூறுகிறது. ஏற்கனவே உள்ள நடைமுறையை ஐயமின்றி விளக்கமாகக் கூறும் பொருட்டே இவ்வாறு வலியுறுத்திக் குறிப்பிடப் பட்டிருந்தது.
எனவே, “தனியார் மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் முதல் முறையாக “தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு” எனும் ஒரு சேர்க்கை அடிப்படையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிகளில் முதுகலைப் பட்டப்படிப்பு சேர்க்கை NEET ஸ்கோர் மூலமாக நிரப்பப்படுகின்றன, “என்று திரிபாதி டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறினார்.
உண்மையில், இந்தியா முழுவதும், அரசுக் கல்லூரிகளில் மட்டுமே ஓபிசி, எஸ்.சி. எஸ்டி பிரிவினருக்கு “இடஒதுக்கீடு உரிமை” உள்ளது. தனியார் மருத்துவ மற்றும் பல் மருத்துவமனைகளில் இடஒதுக்கீடு உரிமை மறுக்கப் பட்டு வருகின்றது. (இட ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்டோரின் உரிமை. அதனைச் சலுகையென பலர் விளித்து வருவது அவர்களின் சமூக நீதி குறித்த அறியாமையைக் காட்டுகின்றது).

யோகி அரசாங்கத்தால் புதிய உத்தரவுகுறித்து செய்தி சேனல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பப் பட்ட செய்தியை முற்றிலும் மறுத்த மருத்துவக் கல்வி முதன்மை செயலாளர் திரிபாதி “ புதிய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப் படவில்லை. அத்தகையச் செய்தி, புதிய அரசாங்கத்தைத் தவறாக வழிநடத்தும் தவறானச் செயல்களில் ஒன்றாகும்” எனத் தெரிவித்தார்.
பா.ஜ.க., எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., வாக்காளர்களின் வாக்கினை சட்ட்மன்றத் தேர்தலில் பெற வல்வேறு வகைகளில் அவர்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி வெற்றி பெற்றுள்ள வேளையில், ஆதித்யநாத் மாணவர்களுக்குச் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அகற்றுவதற்கான ‘செய்தி’ அம்மக்களின் விரோதத்தை சந்தித்திருக்கலாம்.
இதில் கவலையளிக்கக்கூடிய விசயம் என்னவெனில், இந்தப் போலிச் செய்தியை வெளியிட்டவர்களும், அதனைச் சமூக வலைத் தளங்களில் வேகமாகப் பரப்பிய முற்போக்கு முகமூடி அணிந்துள்ள மக்கள் ஒருவர்கூட அந்தச் செய்தியைப் போலி என்று ஒத்துக்கொண்டு அதற்காக வருத்தம்/ மன்னிப்பு கூடக் கேட்காதது தான். அவர்கள் அனைவரின் மனதிலும் இடஒதுக்கீட்டை நியாமற்றது. இட ஒதுக்கீடு இரத்து செய்ய வேண்டும் “ எனும் எண்ணம் ஆழமாகப் பதிந்திருந்தது என்பதையுமே இது  வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.இன் பிரச்சார யுக்தி நாடறிந்த விசயம். அவர்கள் 2014ல் மோடியை பிரதமர் வேட்பாளராக்க 2012 முதலே நரேந்திர மோடி க்கான போலி பிம்பத்தை உருவாக்கச் சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள் வாயிலாகக் கட்டியமைத்து அவரை இந்தியாவை காக்க வந்த ரட்சகர் போல் சித்தரித்து, வெற்றியும் அடைந்தனர். அதன் தொடர்ச்சியாய், 2019ல் யோகி ஆதித்யநாத்தை பிரதமராய் முன்னிறுத்தும் ரகசியத் திட்டத்தின் முதற்கட்டமாய், ஆதியநாத் குறித்த “ஹீரோ”பிம்பச் செய்திகள் திட்டமிட்டு பரப்பப் படுகின்றன.

இவ்வாறு தான் சமூக வள்ர்ச்சிக் குறியீடுகளில் தமிழகம், கேரளாவை விட பின்தங்கி இருந்து குஜராத்தை “குஜராத் மாடல்” என பொய்ப்பிரச்சாரத்தைப் பரப்பி 2014ல்  மோடி அலையை செயற்கையாய் உருவாக்கினர்.