“நிர்வாகம் சீரழிந்து விட்டது” : இந்தியாவின் நிலை குறித்து உலகின் முன்னணி பத்திரிக்கைகள் காட்டம்

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் புதிய உச்சம் பெற்றுவரும் நிலையில் இன்று ஒரே நாளில் 3,32,730 பேர் பாதிக்கப்பட்டு 2,263 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகள் பலவற்றில் தடுப்பூசி வெற்றிகரமாக செயல்பட துவங்கி கொரோனா பரவல் வெகுவாக குறைந்திருக்கும் வேளையில், அந்த நாடுகளுக்கெல்லாம் தேவையான தடுப்பூசியை உற்பத்தி செய்து விநியோகித்து வரும் இந்தியாவில் கொரோனா கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடுவது உலக நாடுகளை திடுக்கிட வைத்துள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட முன்னணி நாடுகள் இந்தியாவிற்கான விமான சேவையை நிறுத்திவைத்திருப்பதோடு இந்தியா செல்ல வேண்டாம் என்று தங்கள் குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த பாதிப்பு மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு குறைபாடுகள் குறித்து உலகின் பல்வேறு முன்னணி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருக்கிறது, அதில் இநத பாதிப்புக்கு மோடி அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம் என்று வெகுவாக குற்றம்சாட்டியிருக்கின்றன. அந்த நாளிதழ்களில் வந்த செய்திகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம் :

இங்கிலாந்தை சேர்ந்த ஆங்கில நாளிதழான ‘தி கார்டியன்’ “நிர்வாகம் சீரழிந்து விட்டது : கொரோனா நரகத்தில் இந்தியர்கள்” என்ற தலைப்பில் 21-ஏப்ரல்-2021 அன்று வெளியிட்டிருக்கும் செய்தியில் –

“எனது வாழ்நாளில் இது போன்ற ஒரு கூட்டத்தை எனது தேர்தல் பிரச்சாரத்தில் பார்த்ததில்லை” என்று மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசிய பேச்சில் இருந்து தொடங்கும் இந்த கட்டுரையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மருத்துவமனைகளுக்கு வெளியே ஆம்புலன்ஸ்-கள் சாரை சாரையாக வரிசை கட்டி நிற்க, பிரதமர் மோடியும் அவரது அமைச்சரவை சகாவான அமித் ஷா வும் மேற்கு வங்க தேர்தலில் வென்று ஆட்சியை பிடிப்பதில் தீவிரம் காட்டிக்கொண்டிருந்தனர் என்று குறிப்பிட்டிருக்கிறது.

மேலும், கூட்டம் சேரவேண்டாம், தனி மனித இடைவெளி வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுறுத்தலுக்கு மாறாக கூட்டம் சேர்பதிலேயே கவனமாக இருந்தனர் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

அதே நாட்டை சேர்ந்த “டெய்லி மெயில்” – நாசிக் நகரில் ஆக்சிஜன் கசிவால் 22 பேர் உயிரிழந்த சம்பவத்தை பதிவிட்டுள்ளது, அதோடு கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காக போலீசார் ஒருபுறம் மக்களை தடியடி நடத்துவதும், மறுபுறம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறுவதையும் விளக்கியுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் இதழ் சிறப்பு செய்தி பிரிவில் பொருளாதார மற்றும் தொற்றுநோய் குறித்த விவகாரங்கள் குறித்த ஆய்வாளரான ரமணன் லஷ்மிநாராயணன் என்பவரது கட்டுரையை “இந்தியாவில் இரண்டாவது அலை கட்டுப்பாட்டை மீறி விட்டது” என்ற தலைப்பில் பதிவிட்டுருக்கிறார்.

கும்பமேளா கொண்டாட்டம், திரளான தேர்தல் திருவிழா ஆகியவற்றை குறித்து பதிவிட்டிருக்கும் அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் ஆங்காங்கே பிணங்களை எரிக்கும் சம்பவத்தை 1984 ம் ஆண்டு நடந்த போபால் விஷ வாயு விபத்துடன் ஒப்பிட்டிருக்கிறார்.

அரசு திட்டமிட தவறியதும் ஆயத்தமாகாததும் தான் இத்தனை பெரிய பாதிப்புக்கு காரணம் என்றும் அவர் கூறியிருக்கிறார். மேலும் உலகின் தினசரி கொரோனா தொற்றில் 40 சதவீதம் இந்தியாவில் தான் ஏற்படுகிறது என்றும் நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டிருக்கிறது.

லே மோண்ட் எனும் பிரெஞ்சு நாளிதழில் நாட்டின் தலைநகர் டெல்லியில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டு குறித்து பதிவிட்டுருப்பதோடு, இதுபோன்ற ஒரு நிலையை தங்கள் வாழ்நாளில் கண்டதில்லை என்று அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றில் முன்னணியில் இருக்கும் மற்றொரு நாடான பிரேசில் நாளிதழான ஓ க்ளோபா இந்தியாவில் பரவி வரும் புது விதமான கொரோனா வைரஸ் குறித்து பதிவிட்டுள்ளது.

ஜப்பான் டைம்ஸ் நாளிதழும் இங்கு நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாமல் இருப்பது ஆகியவற்றை குறிப்பிட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியா-வின் சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கையில், இந்தியாவில் நடந்த கும்பமேளா, தேர்தல் பிரச்சார கூட்டங்கள், மோடி அரசின் முன்னுக்கு பின்னான அறிவிப்புகள், பல்வேறு மாநிலங்களில் உள்ள ஊரடங்கு உத்தரவுகள் குறித்து விளக்கமாக பதிவிட்டிருப்பதுடன், இந்தியா செல்லவும் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா வருபவர்களை தனிமை படுத்தவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருப்பதையும் பதிவிட்டுருக்கிறது.

கல்ஃப் டைம்ஸ் நாளிதழில் இந்தியாவில் கொரோனா தொற்று புதிய உச்சம் தொட்டிருப்பதை கூறியிருப்பதோடு, ஓமான் அரசு இந்தியா செல்ல விதித்திருக்கும் தடை குறித்தும் தெளிவுபடுத்தியிருக்கிறது.

நன்றி ‘தி வயர்’