அரசு ஆரம்ப பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 10 சதவீதம் சரிவு

சென்னை:

கல்வி துறையில் பல்வேறு சீரமைப்புகளை மேற்கொண்ட பின்னரும் தமிழக அரசுப் ஆரம்ப பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 10 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை புள்ளிவிபரங்களை பள்ளி கல்வி துறை சேகரித்து வருகிறது. அரசு பதிவேடுகளின் தகவல் அடிப்படையில் இந்த கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள ஆரம்ப பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கு முடிவு செய்யப்ப்டடுள்ளது. அரசுப் ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய பிரச்சாரங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டனர். எனினும் இந்த கல்வி ஆண்டில் 2.88 லட்சம் மாணவர்கள் மட்டுமே அரசு ஆரம்ப பள்ளிகளில் 1ம் வகுப்பில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு 3.23 லட்சம் மாணவர்கள் 1ம் வகுப்பில் சேர்ந்தனர்.

அதேபோல் அரசு உதவிப் பெறும் பள்ளிகளிலும் கடந்த ஆண்டை விட 10 சதவீத மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 1.22 லட்சம் மாணவர்கள் சேர்ந்தனர். தற்போது இதில் 11 ஆயிரம் குறைந்துள்ளது. தனியார் நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளிகளில் கடந்த ஆண்டை விட 5 சதவீதம் உயர்ந்து 1.75 லட்சம் என்ற நிலையில் உள்ளது. மீதமுள்ள மாணவர்கள் இதர சிபிஎஸ்இ உள்ளிட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,‘‘ கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக தனியார் பள்ளிகளில் இச்சட்டத்தின்படி ஒரு லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தான் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு மாறி வருகின்றனர். 2005ம் ஆண்டு முதலே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது’’ என்றார்.