சிறப்புக்கட்டுரை: எப்டி இருந்த நான்..! : அதிமுக 47!

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

காசு குடுத்து சூன்யம் வைத்துக்கொள்வது என்று சொல்வார்கள். அந்தவழியில் திமுக வலியப்போய் வைத்துக்கொண்ட சூன்யத்தில் உருவானதுதான் 47- வது ஆண்டு துவக்கவிழா காணும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற அதிமுக.

உண்மையில் சொல்லப்போனால், திமுகவிற்கு என்ன மதிப்பு என்பதை உரசிப்பார்க்கும் உரைகல்லாகத்தான் அதிமுகவின் வரவு இருந்தது. இன்றைக்கும் அப்படியே…

1949-ல் திமுகவை அண்ணா தோற்றுவித்தபோது அக்கட்சி ஒன்றும் ஒன்மேன் ஆர்மியாக இல்லை. அண்ணா மட்டுமின்றி அவருக்கு சமமான தகுதிகளோடு நிறைய தலைவர்கள் இருந்தனர். தனிமனித துதிபாடலுக்கு அப்பாற்பட்டு பலரது கூட்டு முயற்சியே அது.. திமுக தொண்டர்களை பொறுத்தவரை கட்சி என்றால், அவர்கள் உயிர் மூச்சாக கருதியது இரண்டே விஷயங்களைத்தான். ஒன்று கருப்பு சிவப்பு கொடி.. இன்னொன்று உதயசூரியன்.

திமுக உருவாகி இருபதாவது ஆண்டில் அண்ணா மறைந்தார்.. அவருடைய இறுதி ஊர்வலத்தின்போது லட்சோப லட்சோப மக்கள் திரண்டு, அதுவே உலக சாதனையாக மாறியபோதுதான் அவரின் மக்கள் செல்வாக்கே முழுதாய் தெரிந்தது.

அண்ணாவிற்கு பிறகு முதலமைச்சராகவும் திமுகவின் தலைவராகவும் கலைஞர் வருகிறார். கட்சியின் தொண்டர்களையும் அனுதாபியாக உள்ள மக்களையும் தன் சொந்த செல்வாக்கால் மடைமாற்றம் செய்யும் எண்ணம்  வலுப்பெறவில்லை.. மற்ற தலைவர்கள் தன் சீட்டை காலி செய்துவிடுவார்களோ என்ற எண்ணத்தில், தன்னை நிலைநிறுத்திக்கொள்வதில் கலைஞர் துரிதமாக இறங்குகிறார்.

இந்த இடத்தில்தான் தனக்கிருந்த ஒரு அருமையான வாய்ப்பை கலைஞர் தவறவிடுகிறார். சுதந்திரம் வாங்கித்தந்தோம் என்று சொல்லியே மத்தியில் ஆட்சியை பிடித்த காங்கிரசை, கம்யூனிஸ்ட் கட்சிக்கு பின் மாநில சட்டசபை தேர்தலில் வீழ்த்தி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது, 1967ல் அண்ணா தலைமையிலான திமுகதான். அதனால் அன்றைய தேதியில், இந்தியாவிலுள்ள பிராந்திய கட்சிகளுக்கெல்லாம் பிதாமகனாக விளங்கியது திமுகவே.

அண்ணாவிற்கு பிறகு திமுகவின் தலைமையை ஏற்ற கலைஞர், பிராந்திய கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய அரசியலில் அடியெடுத்து வைத்திருந்தால், பிரதமர் பதவியை நோக்கி அவர் எளிதாக சென்றிருக்கமுடியும். கலைஞரின் அரசியல் பெருவாழ்வை ஒப்பிடும்போது, பின்னாளில் பிரதமர்கள் ஆன விபி சிங். சந்திரசேகர், தேவகவுடா, குஜ்ரால், போன்றோரின் அரசியல் வாழ்க்கைப்பயணமெல்லாம் ஒன்றுமேயில்லை.

தமிழக அரசியலையும் ஆட்சியையும் அடுத்தநிலையில் இருந்த நெடுஞ்செழியன் போன்றோரிடம் விட்டும் மேற்பார்வை பார்த்து பீஷ்மர் ஸ்தானத்தில் கருணாநிதி தேசிய அரசியலை கையிலெடுத்திருந்தால் 1970களின் துவக்கத்தில் திமுகவுக்குள் சலசலப்பே வந்திருக்காது.

ஆனால் அவரோ பிரதமர் இந்திராகாந்தி வட்டாரத்தில் நெருக்கமாகி, ஒரு பாதுகாப்பான சூழலில் இருப்பதே போதும் என்று நினைத்துக்கொண்டார்.

அதே நேரத்தில் திமுகவுக்குள் நிலை என்ன? அண்ணா இருந்தபோது அடங்கிக்கிடந்த மாதிரியே அவருக்கு பின்னாடி, கலைஞர் தலைமையின்கீழ் நெடுஞ்செழியன், எம்ஜிஆர் போன்றோர் அடங்கி கிடப்பார்களா? எல்லாரும் ஒரு காலத்தில் ஒரே அந்தஸ்த்தில் இருந்தவர்கள்தானே, இதில் நீயென்ன பெரியவன், நானென்ன சிறியவன் என முஷ்டியை முறுக்கினார்கள். இதில் நடமாடும் பல்கலைக்கழகம் என்று வர்ணிக்கப்பட்ட நெடுஞ்செழியனை அடக்கியது மாதிரி எம்ஜிஆரையும் அடக்கிவிடலாம் என்று கலைஞர் நினைத்தார்.

வில்லங்கமான வேலைகள் துவங்கியது. மகன் மு.க.முத்துவை ஹீரோவாக்கி எம்ஜிஆர் ரசிகர் மன்றங்களுக்கு போட்டியாக மு.க.மு மன்றங்களும் உருவாக்கப்பட்டன. அப்புறம் திமுகவில் யாரும் ரசிகர் மன்றங்களை வைத்துக்கொள்ளக்கூடாது என்று ஒரு சீன் உருவாக்கப்பட்டது.

அதாவது மு.க.முத்து மன்றங்களை மூடுவதைப்போல, எம்ஜிஆருக்கு முதுகெலும்பாக திகழும் அமைப்பான ரசிகர் மன்றங்களையும் ஒழித்துக்கட்டுவது..

எதிர்பார்த்த மாதிரியே கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்த எம்ஜிஆருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. பதிலடி கொடுக்கிறேன் என்று கட்சித்தலைவர்களின் சொத்துக்கணக்கை நோண்டினார். அடுத்த ரகளையாக 1972 அக்டோபர் 10-ந்தேதி திமுகவிலிருந்து நீக்கவும் செய்யப்பட்டார். தமிழ்நாடே அல்லோலகல்லோலப்பட்டது. ஒரே வாரத்தில், அதாவது அக்டோபர் 17-ந்தேதி எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என தனிக்கட்சி கண்டார்.

திமுக பிறந்து அண்ணாவுடன் 20 ஆண்டுகள் பயணித்து, பின்னர் முதலமைச்சரான கலைஞரால், கட்சியின் தலைவனாய் மூன்று ஆண்டுகள் மட்டும்தான் பிளவு வராமல் இருக்கச்செய்ய முடிந்திருக்கிறது.

கலைஞரின் அரசியல் வரலாற்றை மூன்று கட்டமாக பிரித்துக்கொள்ளலாம். அண்ணாவோடு திமுகவில் பயணித்த 20 ஆண்டுகள்.

அண்ணாவிற்கு பிறகு திமுக தலைவராய் இரண்டாம் கட்ட தலைவர்களோடு சேர்ந்து பயணித்து மூன்று ஆண்டுகள்.

அதிமுக என்ற இயக்கம் ஆரம்பமாகி அதனுடன், தன்னுடைய உடல் நலம் குன்றும்வரை போராடிய 44 ஆண்டுகள் (1972-2016).

முதல் இரண்டு கட்டங்களைவிட, மூன்றாவது கட்டம்தான் கலைஞருக்கு மிக முக்கியமான கட்டம்.. நீண்டகால கட்டம்.. அரசியல் சாணக்கியன் என்று வர்ணிக்கப்பட்ட கலைஞரின் சாமார்த்தியத்தை அநியாயத்திற்கு சோதித்துப்பார்த்த கட்டம்…

இந்த 44 ஆண்டுகாலத்தில், அதிமுக என்ற தனிக்கட்சி கண்ட எம்ஜிஆரை எதிர்த்து கலைஞர் அரசியல் செய்தது 15 ஆண்டுகாலம். பிளவே இல்லாத திமுக, 1971ல் பெற்று தந்த வெற்றியினால் முதலமைச்சர் ஆன கலைஞர், எம்ஜிஆர், அரசியல் எதிரியான பிறகு, மூன்றேகால் ஆண்டுகள் முதலமைச்சராய் பதவி வகித்தார்.

அண்ணா- எம்ஜிஆரோடு இணைந்து 67ல் சட்டமன்ற தேர்தலை சந்தித்த கலைஞர், அண்ணா இல்லாமல் எம்ஜிஆரோடு இணைந்து 1971ல் சட்டமன்ற தேர்தலை சந்தித்த கலைஞர், 1977ல் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறார்.. எப்படி? பிறந்து நாலரை ஆண்டுகளே ஆன அதிமுக என்ற புதிய இயக்கத்தை எதிர்த்து..

1977ல் மட்டுமின்றி, 1980, 1985 என வரிசையாக மூன்று சட்டமன்ற தேர்தல்களில் கலைஞரின் திமுகவை வீழ்த்துகிறது எம்ஜிஆரின் அதிமுக.

ஜானகி,ஜெ அணிகள் என அதிமுக பிரிந்தபோது, 1989ல் கலைஞரின் திமுக வெற்றிபெறுகிறது. அணிகள் ஒன்றுபட்டு, 1991ல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்தபோது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வெல்கிறது.

ஜெயலலிதாவின் அதிமுகவை, 1996, 2006 ஆகிய இரு தேர்தல்களிலும் கலைஞரின் திமுக தோற்கடிக்கிறது. ஆனால் கூட்டிக்கழித்துப்பார்த்தால் கலைஞரின் திமுக வெற்றி, அதிமுகமுன் பிரமாண்டமெல்லாம் கிடையாது

அதிமுக முதன் முதலில் தமிழக சட்டமன்ற தேர்தலை சந்தித்த 1977 முதல் 2016 வரை மொத்தம் 10 சட்டமன்ற தேர்தல்கள், இதில் ஏழு முறை அதிமுகதான் வெற்றி கண்டுள்ளது.

எம்ஜிஆர் பெற்றது மூன்று வெற்றி என்றால் ஜெயலலிதா தலைமையில் நான்கு முறை வெற்றி. ஒன்றுபட்ட அதிமுக, இரண்டே இரண்டு முறைதான் திமுகவிடம் சட்டமன்ற தேர்தலில் தோற்றுப்போயுள்ளது. இதிலும் 2006ல் திமுக பெரும்பான்மை வெற்றியை எட்டமுடியவில்லை என்பது இங்கே நினைவுகூற வேண்டிய விஷயம்.

அதிமுகவை பொறுத்தவரை அது ஒரு தனிநபர் கட்சி. ஒரேயொரு முகம்தான் அங்கே பிரதானம்… மற்றவையெல்லாம் அங்கே, தனித்துவிடப்பட்டால் மதிப்பிழந்துபோகிற பூஜ்யம்.

47வது ஆண்டு துவக்கத்தை காண்கிற அதிமுகவில் மூன்றே கட்டங்கள்தான். எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் ஜெயலலிதா மறைவுக்குப்பின்..

எம்ஜிஆருக்கு பின்னாடி அவரின் புராணத்தையே ஜெயலலிதா பாடிக்கொண்டிருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் எம்ஜிஆரின் செல்வாக்கை தேவைப்படும்போது மட்டும் எடுத்துக்கொண்டு, தன் சொந்த செல்வாக்கை வளர்த்து தன் இருப்பை முன் நிறுத்துவதில்தான் அவர் தீவிரம் காட்டினார்.

என்னதான் அதிமுக என்றாலும் எம்ஜிஆர் தலைமைக்கும் ஜெயலலிதா தலைமைக்கும் இடையில் பெரிய அளவில் வித்தியாசங்கள் உண்டு.

எம்ஜிஆரின் கட்சியில் அனுபவமிக்க இரண்டாம் கட்ட தலைவர்கள் நிறையபேர் இருந்தனர். நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன், கே.ஏ.கிருஷ்ணசாமி, பண்ருட்டி ராமச்சந்தின்..என நீளமான பட்டியல் உண்டு. அவர்கள் தனிப்பட்ட ரீதியில் கொஞ்சம் செல்வாக்குடனும் வலம் வந்தனர். அவர்களின் ஆலோசனைகளை கண்டிப்பாக எம்ஜிஆர் கேட்பார். அதன்படி நடப்பாரா நடந்தாரா என்பது வேறு விஷயம்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவிலும் இரண்டாம் கட்ட தலைவர்கள் உண்டு. ஆனால் அவர்கள் யாரும் ஜெயலலிதாவுக்கு ஆலோசனையெல்லாம் சொல்லமுடியாது. ஏன், அமைச்சர்களே அவரை நேரில் சுபலத்தில் பார்த்துவிடமுடியாது.

கட்சியோ, ஆட்சியோ ஜெயலலிதா சொல்படித்தான்  அனைவரும் கேட்டாகவேண்டும். சொன்னதை செய்யவேண்டும். செய்யாவிட்டால் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் வெளியே வீசியடிக்கப்படுவார்.

வெற்றியோ தோல்வியோ, அது முழுக்கமுழுக்க தான் எடுக்கும்முடிவின்படியே இருக்கவேண்டும் என்று ஜெயலலிதா விரும்பினார். தோல்விகளை சந்திந்தபோதும் அவர் மற்றவர்கள் யார் மீதும் பழிபோடவிரும்பவில்லை.

எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையின் கீழ் அதிமுக என்ற இயக்கம் பல சாதனைகளை படைத்துள்ளது. மூன்று முறை தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றியது.. மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்த முதல் பிராந்திய கட்சி போன்ற சாகசங்கள், எம்ஜிஆர் வசம்.

37 எம்பிக்களை வெற்றிபெற வைத்து மக்களவையில் மூன்றாவது மிகப்பெரிய கட்சி என்ற அளவில் அதிமுகவை கொண்டுபோய் ஜெயலலிதா வைத்தது, அதிமுகவின் வரலாற்றில் உச்சகட்ட சாதனை.. அதேபோல ‘’திமுகவே இல்லாத மக்களவை’’ என்ற நிலையை ஜெயலலிதா உருவாக்கியது அவரின் குருநாதன் எம்ஜிஆரே செய்யாத சாதனை.

அதேநேரத்தில் கட்சியின் தலைமையே சட்டமன்ற தேர்தலில் தோற்றதும், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு இரண்டுமுறை முதலமைச்சர் பதவி நீதிமன்றத்தின் தீர்ப்பால் பறிக்கப்பட்டதும் ஜெயலலிதாவால், அதிமுக கொண்டிருக்கும் கருப்பு வரலாறு

மொத்த கணக்கில் பார்த்தால், 46 ஆண்டுகளில், 30 ஆண்டுகாலம் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய அதிமுக, ஜெயலலிதா மறைந்த பிறகு இன்றும் திமுகவுக்கு அப்படித்தான் இருக்கிறது.

ஆனால் அசைக்கமுடியாதபடி வலுவான நிலையில் அதிமுக உள்ளதா என்றால் அதுதான் கிடையாது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என இரட்டை தலைமையின் கீழ் கட்சி. ஆட்சி என்பது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்.

இருவரில் யாருமே மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் அல்ல. அமைச்சர்களாக இருப்பவர்களும் மாவட்ட செயலாளர்களும் ஆட்சிபோனால் இப்போதிருப்பதுபோல் ஒன்றுபட்டு இருப்பார்களா என்பதும் பரஸ்பர மரியாதையாவது கொடுத்துக்கொள்வார்களா என்பதும் சந்தேகமே..

இதில் என்ன விசித்திரமென்றால், ஒரு எதிர்க்கட்சிக்கு 89 இடங்களை இதற்கு தமிழக மக்கள் வாரிவழங்கியதில்லை.  2016 தேர்தலில், முதன்முறையாக திமுகவுக்கு தந்தனர் இப்போது அந்த பலத்தை வைத்திருப்பவர், திமுகவின் மூன்றாவது தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலின்.

எதிர்தரப்பிலோ, தேர்தல் அரசியலில் சொந்த செல்வாக்கை காட்டிப்பெறாமல், வேறொருவர் விட்டுச்சென்ற மகுடத்தை சுமக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.. அதுவும், பெரும்பான்மையே இல்லாத ஆட்சி.. வாழ்வா சாவா என சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்து மரணபீதியில் இருக்கும் ஆட்சி

47 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுகவின் கட்டமைப்பு என்பது, இப்போது எப்படி உள்ளது தெரியுமா?

மக்களை கவரக்கூடிய மாபெரும் தலைவர் ஒருத்தரும் இல்லாமல்,  ‘’எப்டி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்’’ என்றுதான்

ஆனால் இப்படிப்பட்ட அதிமுகவையும் அதன் தள்ளாட்டமான ஆட்சியையும் கிட்டத்தட்ட 100 எம்எல்ஏக்களை கையில் வைத்திருக்கும் திமுகவால் கடந்த ஒன்றே முக்கால் வருடமாக ஒன்றுமே செய்யமுடியவில்லை.

இந்த நேரம்வரை, அதிமுகவுக்கு ஏதோ ஒரு வரமும், திமுகவுக்கு ஏதோ ஒரு சாபமும் துரத்திக்கொண்டே இருப்பதுபோல் உள்ளது..