ராஜா சேரமான்
அதிகாரப்பூர்வ அறிவுப்புதான் இன்னும் வெளியாகவில்லை. ஜெயலலிதா மரணம் முன்கூட்டியே எல்லோருக்கும் தெரிந்திருந்ததுபோல அடுத்த அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்பதும் தெளிவாகிவிட்டது.
ஒரு தலைவரின் மறைவுக்குப் பிறகு அந்த இடத்துக்கு யார் என்ற கேள்வி எழும். அந்த வெற்றிடத்தை யாரோ ஒருவரைக் கொண்டு நிரப்பித்தான் ஆகவேண்டும். எனக்கு தலைவர் அண்ணா. எனவே நான் பொதுச்செயலாளர் என்ற எம்ஜிஆரின் பெருந்தன்மையை ஜெயலலிதாவிடம் எதிர்பாக்க முடியாததுபோல சசிகலாவிடமும் எதிர்பாக்கக் கூடாது.
எம்ஜிஆர் இறந்தபோது முதலில் நெடுஞ்செழியன். பிறகு ஜானகி அம்மையார். ஆனால் தகுதியானவர்கள்தான் தன்னை நிலைநாட்டிக் கொள்வார்கள். அப்படி நிரூபித்தவர் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் நாற்காலிக்கு அனுப்பப்பட்டது தற்காலிக ஏற்பாடு. அதனால்தான் அவர் எல்லோரையும் முந்திக்கொண்டு அடுத்த பொதுச்செயலாளர் தகுதி சசிகலாவுக்கு இருப்பதாக சொல்கிறார். இதன்மூலம் தன் முதல்வர் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று நம்புகிறார்.
ஆனால் சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் ஆனதும், முதல்வர் பதவிக்கு சசிகலாவே தகுதியானவர் என்கிற அறிவிப்பை  ஓ.பன்னீர் செல்வத்தை கொண்டே சொல்ல வைப்பார். உண்மையான சசிகலா விசுவாசியான ஓ.பி.எஸ்க்கு அப்படி சொல்வதில் சிரமம் ஒன்றும் இருக்கப்போவதில்லை.
அந்தக் காட்சிகளை இன்னும் மறந்திருக்க முடியாது. ஜெயலலிதா சிறை செல்கிறார். ஓ.பன்னீர் செல்வம் தற்காலிக முதல்வராக பதவியேற்கிறார். அவரால் பதவிப்பிரமாணம்கூட முழுமையாக எடுக்க முடியவில்லை. ஓவென அழுது ஒப்பாரி வைக்கிறார். அவரது அம்மா பக்தியைப் பார்த்து தமிழகமே வியக்கிறது. ஜெயலலிதா சிறைசென்றபோது அழுது ஒப்பாரி வைத்தவர் இப்போது ஏன் அழவில்லை?
ஒருசீனக் கதை ஒன்று சமீபத்தில் படித்தேன். அரசரின் நாய் இறந்துவிட்டது. மந்திரிப் பெருமக்கள் எல்லோரும் நாயை சுற்றிச் சுற்றி வந்து அழுகிறார்கள். அரசருக்கு ஏக பெருமை. நம் நாய் செத்ததுக்கே இவ்வளவு அழுகிறார்களே. நாம் செத்தால் எப்படி எல்லாம் அழுவார்கள் என்று கற்பனை செய்கிறார்.
காலம் ஓடுகிறது. ஒரு நாள் அரசர் செத்துப்போகிறார். நாய்க்காக அழுதவர்கள் யாரும் அரசருக்காக அழவில்லை.
 
பாவம் அந்த அரசரும் ஜெயலலிதாவும்.
 
சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் ஆகவேண்டும் என்று இன்றைய தமிழக  முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மட்டுமல்ல, தம்பிதுரை, பொன்னையன், செங்கோட்டையன், மதுசூதனன், சைதை துரைசாமி, வளர்மதி, கோகுல இந்திரா என மற்ற அதிமுக தலைவர்களும் ஆதரவு அளித்திருக்கிறார்கள்.
வைகோ சசிகலாவின் நல்லெண்ண தூதராக செயல்பட ஆரம்பித் திருக்கிறார். பிரதமர் சசிகலா தலையில் கைவைத்து ஏற்கனவே ஆசிகூறிவிட்டார்.
அதிமுக ஒரு கட்சி என்ற முறையில் ஒரு சாதாரண குடிமகனாகிய நம்முடைய பங்கு எதுவுமில்லை.
ஆனால், இன்று தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பது அதிமுக கட்சியின் அரசு. அதன் பொதுச்செயலாளராக இருந்தவர் ஜெயலலிதா. அவரை நம்பித்தான் கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்தார்கள். அவர் இப்போது நம்மிடையே இல்லை. ஜெயலலிதாவை நம்பி அளிக்கப்பட்ட வாக்குகள் அனைத்தும் மறுபரிசீலனைக்கு உரியவை.
எனவே, தேர்தல் ஆணையம் இதே ஆட்சி தொடரலாமா அல்லது மறு தேர்தல் தேவையா என்பது குறித்து மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தவேண்டும். மக்களின் எண்ணத்தை அறிந்து செயல்பட வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயாக மரபாக இருக்கமுடியும்.
ஆட்சி தொடரலாமா கூடாதா என்று எம்.எல்.ஏக்களிடம் கருத்து கேட்பது, அவர்களின் கட்சித் தாவலுக்கும்,  கறுப்புப்பண பரிமாற்றத்துக்கும், ஊழலுக்குமே வழிவகுக்கும். ஏனென்றால் கட்சி, ஆட்சி அதிகாரம், பதவி இவையெல்லாம் மக்கள் பணத்தை திட்டங்கள் தீட்டி கச்சிதமாக கொள்ளையடிக்கும் நாகரிகத் தொழிலாகிவிட்டது.
பணவேட்டை அரசியல்வாதிகளிடமிருந்து  ஜனநாயகத்தை மீட்க வேண்டுமென்றால் மோடி அரசு கறுப்புப் பண வேட்டையை அரசியல் வாதிகளிடம் இருந்து தொடங்கவேண்டும்.
அரசியல் வாதிகள் பதவிக்கு வருவதற்கு முன்னால் அவர்களிடம் எவ்வளவு சொத்து இருந்தது? இப்போது எவ்வளவு வைத்திருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும்.  முறைகேடான சம்பாத்தியம் எல்லாவற்றையும் முடக்கவேண்டும். அரசுடைமையாக்க வேண்டும்.
கறுப்புப் பண மீட்டெடுக்கும் போரில் இறங்கியுள்ள மோடி அரசு இதற்குத் தயாராக இருக்கிறதா?
ஸ்ரீனிவாசப் பெருமாளின் கல்யாணத்துக்கு குபேரன் கடன் கொடுத்ததுபோல ஜெயலலிதாவுக்கு அடிக்கடி கடன்கொடுத்து உதவியவராம் சசிகலா
அம்மா சினிமாவில் நடித்து கோடிகோடியாக சம்பாதித்தவர் ஆயிற்றே. அவருக்கு அப்படி என்ன பணமுடை; சசிகலாவிடம் கடன் வாங்கும் அளவுக்கு? வெறும் கேசட் கடை நடத்தியவருக்கு அம்மாவுக்கு கடன்கொடுக்கும் அளவுக்கு பணம் எங்கிருந்து வந்தது என்கிற கேள்வியை யாரும் கேட்காதீர்கள்.
யாருமே உங்களுக்கு பதில் சொல்லமாட்டார்கள். வருமான வரித்துறைகூட உங்களுடைய இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாது.
என்னதான் கோடிக்கணக்கான தொண்டர்கள் இருந்தாலும், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்டத் தலைவர்கள் இருந்தாலும் பொதுச்செயலாளர் மட்டுமே அதிமுகவை கட்டிக் காப்பாற்றும் திறன்படைத்தவர். கட்சியில் உள்ள மற்ற அனைவருமே கும்பிடுபோடும் கூஜாக்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு விட்டுச்சென்ற செய்திகளில் இதுவும் ஒன்று.
எனவே அளவற்ற அதிகாரம் படைத்த பொதுச்செயலாளர்  பதவிமீது அதிமுக தலைவர்கள் எல்லோருக்குமே ஆசை உண்டு. ஆனால் அது நிறைவேறாத ஆசை என்பது தோட்டத்துக்கு நெருக்கமாக இருந்தவர்கள், அம்மாவை நெருங்கமுடியாமல் இருந்தவர்கள்  அனைவரும் அறிவார்கள்.
குரங்கு அப்பம் பங்கு வைத்த கதை எல்லோருக்கும் தெரியும்.
உனக்கு எனக்கு என சண்டைபோட்டு இழப்பதைவிட சமாதானமாக அப்பத்தை விட்டுக்கொடுக்க நினைத்துவிட்டார்கள். அதனால்தான் யாரெல்லாம் சசிகலா பொதுச்செயலாளராக எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டதோ அவர்கள் தாமாக முன்வந்து ஆதரவு அறிக்கை வாசிக்கிறார்கள்.
அதிமுகவைப் பொறுத்தவரை அம்மாதான் எல்லாம். மற்றவர்கள் எல்லாம் சும்மா என்பதை தொண்டர்கள் நன்கறிவார்கள்.  இன்னொன்றையும் அரசல்புரசலாக அறிவார்கள்.
அது தொண்டர்களுக்கு எல்லாமுமாக அம்மா இருந்தார். அம்மாவுக்கு எல்லாமுமாக இருந்தவர் சின்னம்மா. அதனால்தான் அம்மாமீது ஒரு வழக்கு தொடரப்பட்டால்கூட அந்த வழக்கிலும் சின்னம்மா இருந்தார்.
அம்மாவின் அனைத்து நல்லது கெட்டதுகளிலும் உடனிருந்தவர். கடைசியில் அம்மாவுக்கு கொள்ளிவைத்தவரும் அவர்தான். கட்சியின் அனைத்து காரியங்களையும் அம்மாவுக்கு பின்னால் இருந்து நிர்வகித்தவர்.
நாம் நினைத்துக் கொண்டிருந்தோம் ஜெயலலிதா நிஜம். சசிகலா நிழல் என்று. சசிகலாவை விட்டால் அதிமுகவை காப்பாற்ற கதியில்லை என்கிற தலைவர்களின் அறிக்கைகளைப் பார்த்தால் தோட்டத்துக்குள்ளே ஜெயலலிதா நிழலாகவும், சசிகலா நிஜமாகவும்  இருந்திருக்கிறார் என்ற உண்மை புலனாகிறது.
கோயில்களில் இரண்டு மூர்த்தி உண்டு. ஒருவர் கருவறை மூர்த்தி. இன்னொருவர் உற்சவமூர்த்தி. ஊருக்குள் உற்சவ மூர்த்தி வலம்வந்து உங்களுக்கு அருள் வழங்குவார். நீங்கள் கண்டு பரவசப் படுவீர்கள். கன்னத்தில் போட்டுக்கொள்வீர்கள். கையெடுத்து கும்பிடுவீர்கள். அந்த திசைபார்த்து வணங்குவீர்கள். ஆனால் உண்மையிலேயே பலம்பொருந்தியவர் கருவறை மூர்த்திதான்.
அதிமுகவின் மிகப்பெரிய  பலம் ஜெயலலிதா. அவருக்கு அடுத்து என்று சொல்லக்கூடிய அளவில் இரண்டாம்கட்ட தலைவர்களே அந்தக் கட்சியில் உருவாக்கப் படவில்லை. அப்படி உருவாகியவர்கள் களையெடுக்கப் பட்டார்கள்.
எம்.ஜி.ஆர் கால தலைவர்களுக்குப்  பிறகு அதிமுகவில் தலைவர்களாக தலையெடுத்தவர்கள் சசிகலாவின் அன்பைப் பெற்றவர்கள்.  ஜெயலலிதாவின் விசுவாசிகளாக நடித்தவர்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் அம்மா புகழ்பாடிய கருணாஸ் ஜெயலலிதாவின் பிணத்தின் முன்னால் நின்று எடுத்த எடுத்த சிரிக்கும் செல்பி.
திட்டமிட்டே உருவாக்கப்பட்ட இந்த விசுவாசக் கூட்டம் சசிகாலவைத் தவிர வேறுயாருக்கு கட்டுப்படும்?  அதிமுகவை உடையாமல் காப்பாற்ற இன்றைய சூழலில் சசிகலாவைவிட  சிறந்த தேர்வு இருக்க முடியாது. இன்னொரு கேள்வியும் கூடவே எழுகிறது. ஏன் சசிகலா வரக்கூடாது என்று நினைக்க வேண்டும் என்பதுதான் அந்தக் கேள்வி.
நேருவுக்குப்  பிறகு இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல்…, கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின், கனிமொழி…  பீகாரில் லாலு- ராப்ரி,  உபியில் முலாயம்சிங் – அகிலேஷ்,  காஷ்மீரில் சேக் அப்துல்லா – உமர் அப்துல்லா,  மகாராஷ்ட்ராவில் பால்தாக்கரே – உத்தவ் தாக்கரே, ஒடிசா பிஜுபட்நாயக் – நவீன் பட்நாயக், ஆந்திராவில் என்.டி.ஆர்.- சந்திரபாபு நாயுடு என வாரிசுகள் கட்சியையும் அரசையும் வளைத்துப் போடும்போது தோழி ஆசைப்படுவது தவறு இல்லை. நான்தான் அரசியல் வாரிசு என்று ஜெயலலிதாவின் அண்ணன்மகள் தீபா ஆசைப்படுவதைவிட இது அசிங்கமும் இல்லை.
அதேநேரத்தில் தமிழக முதல்வர் என்ற முறையில் பன்னீர் செல்வத்துக்கு ஒரு கேள்வி.  கட்சியின் நன்மைக்காக சசிகலாவிடம் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகோள் வைத்த  தாங்கள், முன்னாள் முதல்வரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தமிழக மக்களும் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் சந்தேக்கிறார்களே… அந்த சந்தேகத்தை துடைக்க தமிழக முதல்வர் என்ற முறையில் என்ன செய்யப்போகிறீகள்?