இன்றும் தொடரும் அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை

சென்னை

திமுக – பாஜக கட்சிகள் இடையே தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை இன்றும் நடைபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.   இதில் திமுக – காங்கிரஸ் ஓர் அணியிலும் அதிமுக – பாஜக மற்றொரு அணியிலும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.   இதில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தைகள் நடந்து ஒவ்வொரு கட்சிகளுக்கு அளிக்கப்படும் தொகுதிகள் குறித்து விவரங்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகள் நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது.  இதில் அமித்ஷா கலந்து கொண்டார்.  அதன் பிறகு நேற்று இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை சென்னையில்  ஒரு தனியார் விடுதியில் நடந்தது.  இந்த பேச்சுவார்த்தை ஒன்றரை மணி நேரம் நடந்தது.

இந்த பேச்சு வார்த்தையில் பாஜக மாநிலத் தலைவர் எல் முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை.  ஆகவே இன்று மீண்டும் பேச்சு வார்த்தை தொடர உள்ளது.   விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என பாஜக மாநில தலைவர் முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.