பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்திருக்க வாய்பில்லை: பேனர் வைத்த அதிமுக பிரமுகர் தடாலடி

பேனர் விழுந்ததன் காரணமாக சுபஸ்ரீ இறந்திருக்க வாய்ப்பே இல்லை என, பேனர் வைத்த அதிமுக பிரமுகரின் தடாலடி பேட்டியால் சர்ச்சை எழுந்துள்ளது.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 23 வயதான சுபஸ்ரீ என்கிற இளம்பெண், பள்ளிக்கரணை அருகே சாலையில் நேற்று சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அச்சாலையின் நடுவில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக அதிமுக பிரமுகர் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று சாலையில் சென்றுக்கொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ, நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அவர் மீது தண்ணீர் லாரி ஒன்று ஏறி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

பேனர் கலாச்சாரம் தொடர்வதற்கு கடும் எதிர்ப்புகளை பொதுமக்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து வரும் நிலையில், பேனர் வைத்த அதிமுக பிரமுகரான ஜெயகோபால், பேனர் விழுந்த காரணத்தால் சுபஸ்ரீ இறந்திருக்க வாய்ப்பே இல்லை என்று தடாலடியாக தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலராக இருந்து வரும் ஜெயகோபால், “சுபஸ்ரீ இறப்பிற்கு பேனர் காரணமில்லை. பேனர் விழுந்து அவர் இறந்திருக்க வாய்ப்பே இல்லை. காவல்துறையே இன்னும் பேனர் விழுந்ததன் காரணமாக தான் அவர் இறந்தார் என்று உறுதி செய்யவில்லை. அதற்குள்ளாக இவ்வாறு அவதூறு பரப்புவது தவறு” என்று தெரிவித்தார்.

ஜெயகோபாலின் இக்கருத்து ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வரும் சமூக வலைதளவாசிகளிடையே, மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.