சென்னை:

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஓ.பன்னீர்செல்வம், “ அ.தி.மு.க. மீது தொண்டர்களும் மக்களும் அதிருப்தியில் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது…

“சென்னை மாநகரத்துக்கு  ஜனவரியில் இருந்து மே ஜூன் வரை ஏழு மாதங்களுக்கு ஏழு டிஎம்சி  நீர் குடிநீருக்காக தேவைப்படும்.  ஆனால் நீர் ஆதாரம் குறைவாகவே இருந்தது. அதிகாரிகளை அழைத்து பேசினேன்.  ஆந்திராவில் இருந்து பூண்டி வரும் நீரை அதிகமாக்க, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவரை சந்தித்து கூடுதலான நீர் அளிக்கும்படி கோரினேன். அவரும் ஏற்றுக்கொண்டு, படிப்படியாக தண்ணீரை விடுவிப்பதாக சொன்னார்.  இதுதுவும் அம்மா ஆட்சிக்கு நல்ல பெயரை ஏற்படுத்தியது. இதுவும் அவர்களுக்கு (சசிகலா தரப்பு) பிடிக்கவில்லை.

அடுத்து,  ஜல்லிக்கட்டு விவகாரம். தடை நீக்கக் கோரி,இளைஞர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தினை நடத்தினார்கள். நான் டில்லி சென்று பிரதமர் உட்பட பலதரப்பினரிடம் பேசினேன். பிறகு, தமிழக சட்டமன்றத்தில் அவசர சட்டம் இயற்றப்பட்டது. 65 வருட  இந்திய வரலாற்றில் ஆளுநர் பேசிய அன்று மாலையே சட்டமன்றம் கூடியதில்லை.  ஆனால் இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு அன்றே சட்டமன்றம் கூடி, அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதுவும் அம்மாவின் அரசுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தித்தந்தது. ஆனால் இதுவும் அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, ஜல்லிக்கட்டு விவகாரத்துக்காக நான் பிரதமரை  பார்க்க சென்ற போது,   இன்னொரு பக்கம் ஐம்பது நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக்கொண்டு வந்து பிரதமரை பார்க்க தம்பிதுரை நேரம் கேட்டார்.

பிரதமரோ,  இதே கோரிக்கைக்காக முதலமைச்சர் வந்திருக்கிறார். ஆகவே அவரை பார்க்கிறேன் என்று சொல்லி என்னை சந்தித்தார்.

தம்பிதுரையின் நடவடிக்கை, எனக்கு  மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதை கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவிடம் சொன்னேன். ஆனால் பரிகாரம் கிடைக்கவில்லை.

அடுத்த நிகழ்வாக இன்னொன்றும் நடந்தது. சட்டமன்ற உறுப்பினர்களால் சட்டமன்ற தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வராக செயல்பட்டுக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் எனது அமைச்சரவையில் இருக்கும்  வருவாய் துறை அமைச்சர் ஆர்.வி. உதயகுமார் , “மாண்புமிகு சின்னம்மாதான் முதல்வராக வேண்டும்” என்று செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்.

இது குறித்து நான் சின்னம்மாவிடம், “என் அமைச்சரவையில் இருக்கும்போது, ஒரு அமைச்சர் இப்படி பேட்டி கொடுப்பது நீதிதானா..  நியாயம்தானா?  ஆளுனர் என்னை அழைத்து, உங்கள் மீது உங்கள் அமைச்சருக்கே நம்பிக்கை இல்லையா… அப்படியானால் சட்டமன்றத்தில் பலத்தை நிரூபியுங்கள் என்று சொன்னால் பிரச்னை வருமே” என்றேன்.

இதையடுத்து பிறகு என்னை தொடர்புகொண்ட அவர்கள்,  உதயகுமாரை கண்டித்ததாகவும்,  இனி யாரும்  இப்படி பேச மாட்டார்கள் என்றும் கூறினார்கள்.

இந்த நிலையில், கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜன், என்னிடம் வந்து, “இந்த உதயகுமார் இப்படி பேசிவிட்டாரே” என்று வருத்தப்பட்டார்.  ஆனால் மதுரைக்குப் போய் அவரும் அதே போல பேட்டி அளித்தார்.   அடுத்தநாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர்ர தம்பிதுரையும், இதே கருத்தை கடிதம் வாயிலாக தெரிவித்தார். .செங்கோட்டையனும் அதே கருத்தை சொன்னார்.

இது எனக்கு மிகவும் மன உளைச்சலை அளித்தது. ஆகவே நான் சில அமைச்சர்களை சிலரை அழைத்து, “என்னை முதலமைச்சராக உட்காரவைத்து ஏன் அசிங்கப்படுத்துகிறார்கள். தொண்டர்களும் மக்களும் அதிருப்தியில், வருத்தத்தில் இருக்கிறார்கள்.  ஆகவே, நான் முதல்வர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்” என்று  சொன்னேன்” இவ்வாறு ஓ.பி.எஸ். தெரிவித்தார்.

அவரது பேட்டியின் தொடர்ச்சி அடுத்த செய்தியில்..