சென்னை:
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்றதற்கு தலைவர்கள் ஆதரித்து வரும் நிலையில் தொண்டர்கள் மத்தியல் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்ற இன்றைய தினத்தை அதிமுக அதிருப்தி கோஷ்டியினர் கறுப்பு தினமாக அனுஷ்டித்தனர்.
ஈரோட்டில் அதிமுக நிர்வாகிகள் பலரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். பல இடங்களில் சசிகலா பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் அதிமுக தொண்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து துக்க தினமாகவும் அனுசரித்தனர். முன்னதாக சசிகலா பொதுச்செயலலாளர் நாற்காலியில் உட்கார்ந்த போது சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக தொண்டர் சுவாதி ஆனந்த் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.
 
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ‘புரட்சி மலர் ஜெ.தீபா பேரவை’ என்ற அமைப்பு இன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா தெரிவித்திருப்பது அதிருப்தி கோஷ்டியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவை அரசியலுக்கு வருமாறு, அழைக்க அவரது தி.நகர் வீட்டை முற்றுகையிட்டனர். விழுப்புரம், திருவள்ளூர், பூவிருந்தவல்லியில் இருந்து ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வந்து, தீபாவை அரசியலுக்கு வருமாறு அழைப்புவிடுத்து கோஷமிட்டனர். தங்களால் இங்கு நடப்பதை பார்த்துக் கொண்டு தாங்க முடியவில்லை என்றும், ஜெயலலிதாவின் வாரிசாக அரசியலில் களமாட வேண்டும் என்று தீபாவிடம் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
அப்போது வெளியே வந்த தீபா, அதிமுகவினர் அமைதி காக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தார். மற்றவர்களுடன் தக்க ஆலோசனை செய்துவிட்டு விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என தீபா கூறினார். இதையடுத்து தொண்டர்கள் திரும்பிச் சென்றனர்.