சென்னை: ஏற்கனவே போடப்பட்ட கூட்டணி ஒப்பந்தப்படி, பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்கப்படும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜெயக்குமார் இதை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதிமுக மற்றும் பாமக இடையே போடப்பட்ட மக்களவைத் தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாமகவுக்கு 7 மக்களவை மற்றும் 1 மாநிலங்களவை என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால், மக்களவைத் தேர்தலில் பாமக மோசமான தோல்வியை சந்தித்தது. தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணியே தோல்வியடைந்தார். எனவே, அதிமுக சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி காப்பாற்றப்படுமா? என்ற சந்தேகம் தொடர்ந்து இருந்து வந்தது. இதுதொடர்பான பல வதந்திகளும் உலா வந்தன.

அதேசமயம், தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று கேள்விப்பட்ட பாமக தரப்பும் தமிழக அரசை விமர்சிக்கத் தொடங்கியது. ஆனால், இதற்கிடையில்தான் பாமகவுக்கு கூட்டணி ஒப்பந்தப்படி 1 ராஜ்யசபா இடம் ஒதுக்கப்படும் என அதிமுக தரப்பு அமைச்சர் ஜெயக்குமார் மூலமாக வெளிப்படையாக அறிவித்துள்ளது. அந்த இடத்தை பாமக அன்புமணிக்குத்தான் வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாமக உடனான கூட்டணியால் இடைத்தேர்தல் நடந்த பாப்பிரெட்டிபட்டி, அரூர் மற்றும் சோளிங்கர் போன்ற சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வெல்ல முடிந்தது என்பதாலும், இனி நடக்கவுள்ள வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றில் அக்கட்சியின் ஆதரவு முக்கியம் என்பதாலும் அதிமுக இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.