அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீதான வழக்குகள்

திமுக  பொதுச்செயலாளர் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு தண்டனை கிடைத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரால்  துணை பொதுச்செயலாளராக   நியமிக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் மீது உள்ள பல வழக்குகள் பற்றிய தகவல்கள் மீண்டும் பேசப்பட ஆரம்பித்திருக்கின்றன.

தினகரன் பெயரில் 1995-96ம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள பார்கிலே பேங்கில் 72 கோடி வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டது.  இதையடுத்து அவ்ர் மீது 1996ம் ஆண்டு அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் தினகரனுக்கு அமலாக்கத்துறை 32 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. மேல் முறையீட்டில் அது 28 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது. இதையும் எதிர்த்து தினகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் கடந்த மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 28 கோடி ரூபாய் அபராதத் தொகை விதித்தது சரியே என அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து ஜனவரி 31ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

1990களின் துவக்கத்தில் அப்போதய ஜெ ஜெ டிவிக்கு (தற்போது ஜெயா டிவி) அப்லிங்க் கருவிகளை முறைகேடாக வாங்கிய வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ஜெஜெ டிவிக்கு, அப்லிங்க் வசதிகளை ஏற்படுத்தவும், கருவி களை வாடகைக்கு எடுத்ததிலும், அன்னிய செலாவணி விதிகளை மீறியதாக, மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தவிர, வெளிநாட்டு நிறுவனங்களான ரிம்சாட், சுபிக்பே ஆகிய கம்பெனிகளுக்கு 5 லட்சம் அமெரிக்க டாலர்களை மாற்றியதாகவும், அப்பூப்ஸ் என்ற நிறுவனத்துக்கு 10.45 சிங்கப்பூர் டாலர்களை மாற்றியதாகவும் அமலாக்கப்பிரிவு தினகரன் மீது வழக்கு பதிந்தது.

இந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

மேலும், இந்தியன் வங்கி தொடர்பான வழக்கும் இருக்கிறது. இந்த வங்கியில்  3 கோடி ரூபாயை, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் பரணி பீச் ரிசார்ட்ஸ் நிறுவனம் மூலம் கடனாக பெற்றனர்.

வெளிநாடு வாழ் இந்தியரான சுசீலா என்பவர் அளித்த இந்த மூன்று கோடி ரூபாயில் இருந்து 2.20 கோடி ரூபாயை எடுத்து கொடநாடு எஸ்டேட் வாங்க சசிகலா பயன்படுத்தியதாகவும், இதில் அன்னிய செலாவணி விதிகள் மீறப்பட்டதாகவும், அமலாக்கத் துறை வழக்கு தொடுத்தது.

1996ல் இருந்து 2002 வரை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கின்றன. இவற்றை விரைவாக விசாரிக்க, அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்குகளில் விசாரணை முடிந்து தீர்ப்பு தினகரனுக்கு எதிராக வந்தால், அவருக்கு அரசியல் ரீதியாக பிரச்சினைகள் ஏற்படும்.