சென்னை: சட்டசபை கூட்டத்தொடரையொட்டி, அதிமுக மற்றும் திமுக ஆகிய பிரதானக் கட்சிகள் தங்களின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டங்களை இன்று காலை கூட்டுகின்றன.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காலை 11.30 மணிக்கு ராயப்பேட்டையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்திலும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம், காலை 11 மணிக்கு தேனாம்பேட்டையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்திலும் கூடவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்குப் பின்னர் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால் பரபரப்பு கூடியுள்ளது. தத்தமது கட்சி உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டுமென்று, சம்பந்தப்பட்ட கட்சித் தலைமைகள் ஆலோசனைகள் வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சட்டசபைக் கூட்டத்தொடர் ஜுன் 28ம் தேதி தொடங்கி, ஜுலை 30 வரை, மொத்தம் 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், சபாநாயகர் மீதான திமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படுமா? அல்லது திரும்பப் பெறப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதேசமயம், பிரதான பெரிய எதிர்க்கட்சியான திமுக, பல பிரச்சினைகளை எழுப்பி ஆளுங்கட்சியை திணறடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.