சென்னை:

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் பாஜகவிடம் அதிமுக ஆதரவு கோரவில்லை என்று தமிழக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக ஏற்கனவே இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் நிலையில், இதுவரை அதிமுக தலைமை  பாஜக ஆதரவை கோரவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், தமிழக பாஜகவுக்கு தலைமை இல்லையே என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தமிழக பாஜகவுக்கு தலைமை இல்லை என்றால் மத்திய பாஜக தலைமையிடம் பேசலாமே? எதற்கெடுத்தாலும் மத்திய அமைச்சர்களை சந்திக்க டில்லி செல்லும் தமிழக அமைச்சர்கள், ஆதரவு குறித்து பேசமாட்டார்களா என்றும் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன், நாங்குநேரி மற்றும் விக்ரவண்டி இடைத்தேர்தல்களுக்கு பாஜகவின் ஆதரவை அதிமுக கோரவில்லை  என்பதை உறுதிப்படுத்தியவர், இருந்தாலும், அதிமுக அரசாங்கத்திற்கு பாஜகவின் ஆதரவை சந்தேகிக்க முடியாது என்றும் கூறினார்.

ஏற்கனவே  “நாடாளுமன்ற தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி தொடரும். அதைப் பற்றி முற்றிலும் சந்தேக மில்லை. ஆனால் இதுவரை, அவர்கள் (அதிமுக) இந்த இடைத்தேர்தல்களுக்கு எங்கள் ஆதரவை நாடவில்லை. அவர்கள் எங்கள் மத்திய தலைமையுடன் பேசியிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது ”, என்றும், இது தொர்பாக “நான் அதிமுக தலைவர்களிடம் பேசவில்லை, ஏனென்றால் 370 வது பிரிவின் நீர்த்தத்தையும், மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டங்களையும் விளக்கும் கூட்டங்களில் நாங்கள் பிஸியாக இருந்தோம் என்று தெரிவித்தார்.