அதிமுக கொடியுடன் சசிகலா வெளியிட்ட செய்தி அறிக்கை பரபரப்பு

சென்னை:
சிகலா தரப்பில் வெளியிடப்பட்ட இன்றைய செய்த அறிக்கையில், `அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் சசிகலா’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது மீண்டும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

 

ஜெயலலிதாவின் 73-வது பிறந்தாளையொட்டி, தி.நகர் இல்லத்தில் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் சசிகலா. இந்த நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து, தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியமைப்போம். விரைவில் தொண்டர்களையும் மக்களையும் சந்திக்க வருவேன்” என்றார்.

இதைத் தொடர்ந்து, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், ராதிகா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர் சசிகலாவைச் சந்தித்தனர்.

இன்றைய நிகழ்வு தொடர்பாக, சசிகலா தரப்பிலிருந்து அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் அ.தி.மு.க கொடியும், சசிகலாவை அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ அறிக்கை ஏட்டில் உள்ளதுபோல் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது படங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற தலைப்பு மட்டும் இடம்பெறவில்லை.

அந்த அறிக்கையில், “மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும், இந்தச் செய்தி அறிக்கையை வெளியிட்டது, கழக பொதுச்செயலாளரின் முகாம் அலுவலகம், 179/68, ஹபிபுல்லா ரோடு, தியாகராய நகர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒருபுறம் ஜெயலலிதாவின் பிறந்தநாளை, இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இணைந்து கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக்கொண்டிருந்த அதே வேளையில், அ.தி.மு.க-வை உரிமை கோரும்விதமாக சசிகலா வெளியிட்டிருக்கும் அறிக்கை, அரசியல் சூழலில் மிக முக்கியமானதாக கவனிக்கப்பட்டுவருகிறது.