தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக ஒப்பந்தம் இல்லை : அதிமுக

சென்னை

தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிப்பதாக அதிமுக எவ்வித ஒப்பந்தமும் போடவில்லை என அமைச்சர் ஜெயகுமார் கூறி உள்ளார்

மாநிலங்களவையில் தமிழகத்தின் 6 உறுப்பினர்கள் பதவிக் காலம் முடிவடைகிறது.  இதில் 3 திமுக மற்றும் 3 அதிமுக என உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்.  அதிமுக கூட்டணியில் இந்த உறுப்பினர் பதவிகளைப் பெறக் கூட்டணிக் கட்சிகள் பெரிதும் முயன்று வருகின்றன.   சென்ற முறை அதிமுக சார்பில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் மற்றும் திமுக சார்பில் மதிமுகவின் வைகோ ஆகியோர் பதவி பெற்றனர்.

இந்த முறை திமுகவில் கூட்டணிக் கட்சிகளுக்குப் பதவி வழங்க மாட்டாது என்னும் நிலையில் அதிமுகவில் தங்களுக்கு  மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என தேமுதிக எண்ணி வருகிறது.   கூட்டணி அமையும் போது இது குறித்து ஒப்பந்தம் இடப்பட்டுள்ளதாகவும்  முதல்வரிடம் இது குறித்து நேரில் சந்திக்க உள்ளதாகவும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கூறி வருகிறார்.

அதன்படி தேமுதிக துணைத்தலைவர் எல் கே சுதீஷ் நேற்று முதல்வரைச் சந்தித்தார்.

தமிழக அமைச்சர் ஜெயகுமார், “தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர்  பதவி அளிப்பதாக அதிமுக எவ்வித ஒப்பந்தமும் செய்யவில்லை.  நாங்கள் பாமகவுக்கு மட்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக ஒப்பந்தம் செய்து இருந்தோம்.   அதை நாங்கள் கொடுத்து விட்டோம்.” எனக் கூறி உள்ளார்.