சென்னை,

டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஜக்கையன் எம்எல்ஏ அங்கிருந்து எஸ்கேப்பாகி எடப்பாடி அணிக்கு வந்துள்ளார்.

இதுநாள் வரை டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டும், கவர்னரிடம் எடப்பாடியை மாற்ற வேண்டும் என்று மனு கொடுத்தும் ஆதரவு தெரிவித்து வந்த ஜக்கையன் இன்று திடீரென தலைமை செயலகம் வந்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜக்கையன்,  தற்போதைய சூழ்நிலையில் முதல்வராக பழனிச்சாமி தொடர வேண்டும்  என்பதே எனது விருப்பம் எனவும்,சபாநாயர் அனுப்பிய நோட்டீஸிற்கு நேரில் விளக்கம் அளிக்கவே தலைமை செயலகம் வந்தேன் என்றார்.

டிடிவி தினகரன் கேட்டு கொண்டதால் ஆளுநரை சந்தித்து மனு அளித்ததாக தெரிவித்தார்.

அதிமுக மிகப் பெரிய கட்சி. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மிகப் பெரிய இயக்கமாக அதை வளர்த்தெடுத்தனர். இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா மாற்றிக் காட்டினார்.

நான் எம்ஜிஆர் காலத்திலும் பின்னர் ஜெயலலிதா காலத்திலும் இணைந்து அரசியல் பணி ஆற்றியவன். தற்போது ஏற்பட்டுள்ளது

உட்கட்சிப் பிரச்சினை. இந்தப் பிரச்சினை குறித்து அன்று ஆளுநரிடம் மனு அளிக்கும் முன்னர் இது உட்கட்சிப் பிரச்சினை என்றுதான் தினகரனிடம் தெரிவித்து விட்டு உடன் சென்று மனு கொடுத்தேன்.

கடந்த பத்து பனிரெண்டு நாட்களாக நடைபெறும் நிகழ்ச்சியைப் பார்க்கும் போது எங்கள் குடும்பப் பிரச்சினையை திமுக பயன்படுத்திக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

நூறாண்டு கடந்து இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியதற்கு பங்கம் வந்து விடுமோ என்று அஞ்சினேன்.

ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடு வந்தால் யார் பெரும்பான்மையோ, எது பெரும்பான்மை கருத்தோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.மிக நெருக்கடியான் நேரத்தில் இந்த ஆட்சி தொடர திமுகவின் எண்ணம் நிறைவேறாமல் தடுக்க என் ஆதரவை எடப்பாடி அரசுக்கு அளிக்கிறேன். இந்த ஆட்சி காக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்”

இவ்வாறு ஜக்கையன் கூறினார்.