எண்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.

எண்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடிக்கு அ.தி.மு.க. அதிமுக எம்.எல்.ஏ. கண்ணீர் அஞ்சலி செலுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (22). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி என 12 வழக்குகள் நிலுவையில் இருந்தன.

எம்.எல்.ஏ. ரவி – ரவுடி ஆனந்தன்

இந்த நிலையில் கடந்த 3ம் தேதி, சென்னை ராயப்பேட்டை பகுதியில் கூட்டாளிகளுடன் பெண்களை கேலி செய்துள்ளார். இந்த தகவலை அறிந்த காவலர்கள் சிலர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, காவலர் ராஜவேலுவை சரமாரியாக தாக்கிவிட்டு ஆனந்தன் தப்பியோடிவிட்டார்.

ஆனந்தன் தாக்கியதில் காவலர் ராஜவேலுக்கு தலையில்  பலத்த காயம் ஏற்பட்டது.

ராஜவேலுவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போலீசார், ஆனந்தனை தேடி வந்தனர்.

அன்று இரவு, அடையாறு மத்திய கைலாஷ் பகுதியிலுள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் அருகே கூட்டாளிகளுடன் ஆனந்தன் பதுங்கியிருந்த தகவல் காவல் துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற காவலர்கள், ஆனந்தனை சுற்றி வளைத்தனர். ஆனால் மீண்டும் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோட ஆனந்தன் முயன்றார். ஆகவே காவலர்கள் தற்காப்புக்காக ஆனந்தனை சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ஆனந்தன் மரணமடைந்தார்.

இந்த நிலையில் இன்று ஆனந்தனுக்கு ராயப்பேட்டையில் உள்ள  அவரது இல்லத்தில் சில சடங்குகள் நடந்தன. ஆனந்தன் புகைப்படத்தை வைத்து இந்த சடங்குகள் நடத்தப்பட்டன. இதில் ஆளும்கட்சியான அதிமுகவைச் சேர்ந்த விருகம்பாக்கம்  எம்.எல்.ஏ. ரவி கலந்துகொண்டார். ஆனந்தன் புகைப்படத்தைப் பார்த்து கண்கலங்கிய அவர் மனமுருகி அஞ்சலி செலுத்தினார். ஆனந்தனின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

எண்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடிக்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. கண்ணீர் அஞ்சலி செலுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.