வேலூர்,

பாமகவின் ஒருங்கிணைந்த மத்திய மாவட்டப்பொதுக்குழு கூட்டம் வேலூர் அருகே அணைக்கட்டில் நடைந்தது. இதில் பாமக நிறுவனன்ர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார்.

அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தற்போது தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான பினாமி அரசு பதவி ஏற்றுள்ளது. இது சசிகலாவின் பினாமி அரசு. முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி மீது  ஊழல், மணல் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன என்றார்.

மேலும்,  இதை அறிந்தே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சியின் ஐவர் குழுவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியை நீக்கியிருந்தார். பின்னர் அவர் சேர்த்துக்கொண்டார். மேலும் எடப்பாடி, ஏற்கனவே பணம் பரிமாற்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டிக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.

தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஜனநாயக படுகொலை நடைபெற்றுள்ளது.  அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் 11 நாட்களாக ஒரு ஓட்டலில் அடைத்து வைக்கப்பட்டு, அவர்களுக்கு மது கொடுத்து மூளை செயல்படாத வண்ணம் மழுங்கடிக்கப்பட்டு அப்படியே சட்டசபைக்கு கூட்டிவந்து வாக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.  இது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும்,

இனிமேல் தமிழகத்தில்,  சசிகலாவின் வழிநடத்தல்படி தமிழகத்தில் ஆட்சி நடைபெறும். தமிழக முதல்வரும், அமைச்சர்களும் சசிகலாவின் முகவர்களாகவே செயல்படுவார்கள். பெங்களூரு சிறையில் இருந்தவாரே சசிகலா அவரைகளை ஆட்டுவிப்பார் என்றும் கூறினார்.

மேலும்,  தமிழக சட்டசபையில் வாக்கெடுப்பின்போது, எதிர்க்கட்சியான தி.மு.க. பொறுப்புடன் செயல்படவில்லை என்றும்   கலவரத்தை உருவாக்க திமுக  திட்டம் தீட்டியது. ஆனால் அது நடக்கவில்லை என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் இந்த ஆட்சி நீண்ட நாட்கள் நிலைக்காது என்று அரசியல் கணிப்பு வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அது தான் எனது கருத்தும் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.