டில்லி

பாராளுமன்றக் கூட்டங்கள் மாசு படிந்த டில்லியில் நடத்தாமல் தென் இந்தியாவில் நடத்த வேண்டும் என அதிமுக எம் பி நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டில்லியில் காற்றில் கடந்த சில மாதங்களாக கடும் மாசு படிந்துள்ளது தெரிந்ததே.   இந்தியா – இலங்கை கிரிக்கெட் தொடரின் போது இலங்கை வீரர்கள் இந்த மாசினால் முகமூடி அணிந்து விளையாடியது உலகெங்கும் பெரும் பரபரப்பானது.   தற்போது டில்லி மேலும் மாசு அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் ராஜ்யசபையின் அதிமுக உறுப்பினர் இது குறித்து உரையாற்றி உள்ளார். அவர், “தற்போது டில்லியில் வசிப்பதே ஒரு அச்சுறுத்தல் ஆகி வருகிறது.   இது ஒரு நச்சு வாயு மண்டலமாகி மக்கள் வசிக்கவே லாயக்கற்றதாகி வருகிறது.  அதனால் இந்த மன்றம் தனது கூட்டத் தொடர்களை தென் இந்தியாவில் நடத்த ஒப்புதல் அளிக்கலாம்.   இதன் மூலம் நமது வட இந்திய நண்பர்கள் மாசு இல்லாத சூழலையும், மற்ற நகரங்களின் எழிலையும் ரசிக்கலாம்.   இந்தக் கூட்டங்களை நாக்பூர், பெங்களூரு அல்லது சென்னையில் நடத்தினால்  தேசிய ஒற்றுமைக்கும் அது வழி வகுக்கும்” எனக் கூறி உள்ளார்.