டெல்லி: வேளாண் மசோதாவில் உள்ள தவறுகளை விமர்சிக்க தமக்கு உரிமை உண்டு என்று அதிமுக எம்பி எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இந்த மசோதாவை எதிர்த்து பேசியது ஏன் என்று அவர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் கூறி உள்ளதாவது:  மக்களவையில் அதிமுக மசோதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மாநிலங்களவையில் எதிர்த்து பேசியதால் அது இரட்டை நிலைப்பாடு என்று அர்த்தம் அல்ல.

மக்களவையில் பேசிய அதிமுக எம்பி ரவிந்திரநாத் அரசியலுக்கு புதியவர். அவருக்கு அவ்வளவுதான் தெரியும். நான் புதியவன் கிடையாது. விமர்சிக்கும் உரிமை எல்லாருக்கும் உள்ளது. எனக்கும் உண்டு என்பதால் நானும் அதை செய்தேன்.

மசோதாவை அதிமுக ஆதரித்த அதே சமயம், விமர்சிக்கவும், சுட்டிக்காட்டவும் உரிமை உள்ளது. அந்த மசோதாவில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்காத நிலையில் விமர்சிக்கும் தேவை எழுந்தது. நான் விமர்சித்தேன். ஆனால் மசோதாவை ஆதரித்து வாக்களித்தோம் என்று கூறினார்.