போராட்டத்தை கைவிடுங்கள்: டில்லியில் போராடும் விவசாயிகளிடம் தம்பிதுரை வேண்டுகோள்

டில்லி,

டில்லியில் இன்று 30வது நாளாக போராடி வரும் தமிழக விவசாயிகளை அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை இன்று பிற்பகல் சந்தித்து பேசினார்.

அப்போது, போராட்டத்தை கைவிடுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

பயிர் கடனை தள்ளுபடி, நதிநீர் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வகையான நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர் தமிழக விவசாயிகள்.

விவசாயிகள் போராட்டத்துக்கு தமிழகம் மட்டுமின்றி உலக முழுவதும் உள்ள தமிழர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று மண் சோறு சாப்பிட்டு  போராட்டம் நடத்தினர். இன்று கோரிக்கைகளை மையினால் தங்களின் உடலில் எழுதி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று 4வது முறையாக அதிமுக எம்பி தம்பிதுரை போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்து அதிமுக எம்பிக்கள் பேசினார்கள்.

மேலும்  இதுகுறித்து பேசுவதற்கு எம்பிக்களாகிய நாங்கள்  இருக்கிறோம். எனவே போராட்டத்தை முடித்து கொள்ளுங்கள்’ என்று விவசாயிகளிடம் தம்பிதுரை கேட்டுக் கொண்டார்.