சஸ்பெண்டு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

டில்லி:

பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதால் சஸ்பெண்டு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் இன்று பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாதைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த இரண்டு வாரமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில்  ரஃபேல் ஒப்பந்த விவகாரம் மற்றும் மேகதாது அணை விவகாரம் பூதாகரமாக எழுந்துள்ளது.  இதை விவாதிக்க கோரி காங்கிரஸ்  மற்றும் தெலுங்குதேசம், அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய ரஃபேல் முறைகேடு தொடர்பான விவாதத்தின்போது, ராகுல்காந்தியின் பேச்சின் போது  இடையூறாக அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.பி.க்கள் 26 பேரையும் 5 நாட்கள் சஸ்பெண்டு செய்து  சபாநாயகர்  உத்தரவிட்டார்.

இந்த நிலையில் அதிமுக உறுப்பினர்கள் இன்று பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர்.

அதேபோல் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும், எம்பிக்கள் அமளியில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால் அவையை 12 வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.