மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு கிடையாது: எடப்பாடி

சென்னை:

பாராளுமன்றத்தில் நாளை எதிர்க்கட்சிகள் மற்றும் தெலுங்குதேசம் கொண்டு வரும் பாரதியஜனதா மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளிக்காது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.

இன்று மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு, அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டு, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, மேட்டூர் அணை பகுதியில், காவிரி நிதி நீர் விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது குறித்து நினைவு ஸ்தூபி அமைக்கப்படும் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள நீர் பாசனத்தின்  கடைமடை செல்லும் வரை தொடர்ந்த மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் என்றார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், சத்துணவு திட்டத்துக்கு முட்டை வாங்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கூறினார்.

மேலும், எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், காவிரி பிரச்சினையின்போது நாடாளுமன்றத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக  எந்த கட்சியும் குரல் கொடுக்கவில்லை என்றும், . அ.தி.மு.க எம்பிக்கள்தான்  தொடர்ந்து 22 நாட்கள் போராட்டம் நடத்தி சபையை நடைபெறவிடாமல் செய்தனர் என்று கூறினார்.

தற்போது  ஆந்திர பிரச்சனைக்காக தெலுங்கு தேசம் கட்சி பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என்றும் கூறினார்.

இதன் காரணமாக அதிமுக, மோடி தலைமையிலான பாஜ அரசுக்கு ஆதரவாகவே நாளை நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது செயல்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மோடி அரசுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பது உறுதியாக உள்ளது.