முதல்வர் எடப்பாடி வெளிநாடு பயணம்! அதிமுகவினர் விழாக்கோலம்

சென்னை:

மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க 13 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று சென்னையில் இருந்து புறப்பட்ட அவருக்கு அதிமுகவின் பிரமாண்ட வழியனுப்பு விழா நடத்தி அனுப்பி வைத்தனர்.

விமான நிலையம் வந்த முதல்வரின் காலில் அதிமுக நிர்வாகிகள் பலர் விழுந்து வணங்கி, வழியனுப்பி வைத்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தின் சுகாதாரத்துறையை மேம்படுத்தவும், மின்துறை, தொழில்துறை ஆகியவற்றில் முதலீட்டை ஈர்க்கவும் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிசாமி இன்று புறப்பபட்டுச் சென்றார். அவர் வெளிநாட்டு பயணங்களை முடித்து விட்டு, செப்டம்பர் 10ந்தேதி சென்னை திரும்புகிறார்.

இன்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலை உள்ள இல்லத்தில் இருந்து முதலமைச்சர் விமான நிலையத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் செல்லும்  வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் நின்ற பொதுமக்களும் அதிமுகவினரும் அவரது வெளிநாட்டுப் பயணத்துக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். பல இடங்களில் எடப்பாடி செல்லும் சாலையோரம், மேளம் அடித்து அதிமுகவினர் அவருக்கு  வாழ்த்து தெரிவித்து கொண்டாடினர்.

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும் முதலமைச்சரை வரவேற்று விமானத்தில் வழியனுப்பி வைத்தனர். அப்போது அதிமுக நிர்வாகிகள் பலர் எடப்பாடியின் காலில் விழுந்து வணங்கி, வழியனுப்பி வைத்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக எடப்பாடி வெளிநாடு செல்லும் நிலையில், அவருக்கு பாமக தலைவர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜய்காந்த், பாஜக தலைவர் தமிழிசை வாழ்த்து தெரிவித்திருந்தனர். சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார், ஜி.கே.வாசன் போன்றோர் எடப்பாடி வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.