7 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா தொகுதி கிடைத்ததால் பலருக்கும் வயிற்றெரிச்சல்: பாமக நிறுவனர் ராம்தாஸ்

விழுப்புரம்:

7 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா தொகுதி கிடைத்ததால் பலருக்கும் வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளதாக, பாமக நிறுவனர் ராம்தாஸ் கூறியுள்ளார்.

விழுப்புரம் அடுத்த வானூரில் இன்று சனிக்கிழமை நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

7 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா தொகுதி என கூட்டணி உடன்பாட்டை கேள்விப்பட்ட பலரும் வயிறு எரிகின்றனர்.

கூட்டணியில் ஒதுக்கப்படும் தொகுதிகள் விரைவில் அறிவிக்கப்படும். இது இயற்கையான கூட்டணி. தொண்டர்கள் கைகோத்து விட்டனர். அறிவிக்கும் முன்பாகவே தொண்டர்கள் அளவில் இணைந்து விட்டனர்.

கட்சி தொடங்கிய போதும், கூட்டணி வைத்தபோதும் கொள்கையை எக்காலத்திலும் விட்டுக் கொடுத்ததில்லை. கொள்கையில் நாம் தேக்குமரம். கூட்டணியின்போது நாணலாக வளைவோம். கொள்கையை விட்டு பேரம் பேசுவதில்லை.

பத்து அம்சக் கோரிக்கைகளை கூட்டணி ஏற்படுவதற்காக முன்வைத்தது பற்றி சொல்லமாட்டார்கள். ஆறு கோரிக்கைகளை கூடுதலாக்கி பத்தாக்கியவர் அன்புமணி.

7 தமிழர்கள் விடுதலைக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம். அற்புதம்மாள் தோட்டத்துக்கு வந்து அழுதார். முதல்வர் வரும்போது அழுத்தம் தரக் கூறினார். விடுதலையானவுடன் முதலில் செல்வது தைலாபுரம் தோட்டத்துக்குத்தான் என பேரறிவாளனே தெரிவித்துள்ளார்.

7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி 9-ம் தேதி நடக்கும் மனித சங்கிலிப் போராட்டத்துக்கு பாமக தொண்டர்கள் முழு ஆதரவு தர வேண்டும். அதற்கு முன்பே விடுதலை செய்ய வலியுறுத்தவும் முனைப்பாக உள்ளோம்.

கண்ணியமான வளர்ச்சிக்கான அரசியல் புரிதல் வேண்டும். பிரச்சாரத்தில் யாரையும் குறை கூறாதீர்கள். நம் மீது புழுதி வாரி தூற்றினாலும், பதில் கூறக் கூடாது. நேர்மறையான பிரச்சாரம் தேவை. கோபப்படாதீர்கள்.

ராமதாஸ் சமூகப் போராளி, சிறப்பான கட்சி நடத்துகிறார். அக்கட்சிக்குதான் அதிகாரமுண்டு. அதுபற்றி சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என வைகோ கூறியது மன ஆறுதலைத் தந்தது.

அன்புமணி கூறியதுபோல் 40 தொகுதிகள் மட்டுமல்ல, 21 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இக்கூட்டணி வெல்ல வேண்டும். ஜூன், ஜூலை உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி தொடரும்.

கண்ணியத்தோடு பேசுங்கள், பழகுங்கள். யார் தூற்றினாலும் கவலைப்படாதீர்கள். தேர்தல் முடிந்த பிறகு நாகரிகமாகப் பதில் சொல்வோம். அப்போதும் கண்ணியம் தவறக்கூடாது என்பது அன்புமணியின் கட்டளை. நாற்பதும் நமதே”.

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசினார்.

.