சென்னை:

ட்டு எண்ணிக்கையை  அதிமுகவினரும் கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக துணைஒருங்கிணைப்பாளர்  ஈபிஎஸ், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

தேர்தலை வாக்குப்பதிவை தொடர்ந்த, எக்சிட் போல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடு நடைபெற வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதையடுத்து வாக்கு எண்ணிக்கையின்போது கவனமாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ், திமுக, அமமுக போன்ற கட்சிகள் தங்களது கட்சி முகவர்களை எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்திய நிலையில், அதிமுகவும் தனது பங்குக்கு வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருங்கள் என்ற அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, முதல்வர்  எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்,

பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில், 23.5.2019 அன்று வாக்கு எண்ணும் பணிக்கு முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் கழக உடன்பிறப்புகள் மிகவும் கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற்று கழகத்திற்கு அர்ப்பணிக்கும் வகையில் பின்வரும் அம்சங்களை நினைவில் கொண்டு பணியாற்றுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 23.5.2019 அன்று, கழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் உங்களுடைய மையங்களுக்கு காலை 6 மணிக்கே சென்று விட வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தும் முறைப்படி செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

வாக்குப்பதிவு எந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பதிவான வாக்குகளும், எண்ணிக்கையில் காட்டப்படும் வாக்குகளும் ஒரே எண்ணிக்கையில் உள்ளனவா என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடியும் போதும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் எத்தனை வாக்குகள் கிடைத்துள்ளன என்பதை எழுதி வைத்துக்கொண்டு, அதை தேர்தல் அதிகாரியிடம் சரிபார்க்க வேண்டும். அதன் பின்னர் தான் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் யாரேனும் மாற்றுக் கட்சியினருக்கு ஆதரவாகவும், முறைகேடாகவும் செயல்படுகிறார்களா என்பதை தீவிரமாக கண்காணித்து, குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வினை காண வேண்டும்.

தி.மு.க.வினர் தில்லுமுல்லு செய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் கைதேர்ந்தவர்கள் என்பதை இந்த நாடே நன்கு அறியும். இதற்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்லலாம். ஆகவே, வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க.வினரால் தில்லுமுல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை விழிப்போடு கண்காணித்து, அது சம்பந்தமாக மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வு காண வேண்டும்.

கழகம் மற்றும் தோழமைக் கட்சிகளின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் உங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அங்கிருந்து வெளியில் வர வேண்டும்.

கழகம் மற்றும் தோழமைக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள தலைமை ஏஜெண்டுகளும், தங்களுக்கான வாக்கு எண்ணும் மையங்களில், வாக்கு எண்ணும் பணி முறையாக நடைபெறுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

கழகத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும் விழிப்புடன் இருந்து பணியாற்றுங்கள். இது, ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க நாம் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நினைவில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.