சென்னை

மிழகத்தில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்குப் போட்டியிட அதிமுக மூத்த தலைவர்கள் முயற்சி செய்கின்றனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களில் 3 இடங்கள் திமுகவும் 3 இடங்கள் அதிமுகவும் போட்டியிட உள்ளன.  திமுகவைப் பொறுத்த வரை கூட்டணிக் கட்சிகளுக்குத் தரவேண்டிய இடங்களை ஏற்கனவே  அளித்து விட்டதால் எவ்வித குழப்பமும் இல்லை.   அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக ஒரு இடம் கேட்பதும் அதை அதிமுக மறுப்பதுமாகக் குழப்பங்கள் நிலவி வருகின்றன.

வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் 10 மூத்த உறுப்பினர்கள் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.  இவர்களில் முன்னாள் மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை, கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி, முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர் விஸ்வநாதன் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவார்கள்.

இதில் தம்பித் துரை மற்றும் முனுசாமிக்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.  கடந்த மக்களவை தேர்தலில் இருவரும் கிருஷ்ணகிரி மற்றும் கரூர் தொகுதிகளில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர்களிடம் தோல்வி அடைந்தனர். மற்றொரு மூத்த தலைவரான நத்தம் விஸ்வநாதன் கடந்த  ஜூலை மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் இருந்தே முயற்சி செய்து வருபவர் ஆவார்.

கரூரில் தோல்வி அடைந்த தம்பி துரை மற்றும் கிருஷ்ணகிரியில் தோல்வி அடைந்த முனுசாமி ஆகியோருக்கு கட்சி உறுப்பினர்கள் இடையே நல்ல செல்வாக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.  நத்தம் விஸ்வநாதன் முதலில் ஓபிஎஸ் கோஷ்டியில் இருந்தவர் ஆவார்.  தற்போது கட்சியின் இருமுக்கிய தலைவர்களுடனும் நெருக்கமாக இருப்பதால் அவரும் போட்டியில் முக்கிய இடம் பெற்றுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களைத் தவிர முன்னாள் மாநிலங்களவை துணைத்தலைவர் பி எச் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்ரேயன், அன்வர் ராஜா ஆகியோரும் போட்டியிட முயற்சி செய்து வருகிறனர்.

தற்போது பதவிக்காலம் முடிந்துள்ள மூன்று உறுப்பினர்களான விஜிலா சத்யநாத், சசிகலா புஷ்பா மற்றும் முத்துக் கருப்பன் ஆகிய அனைவரும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.