ஜி கே வாசன் மாநிலங்களவை உறுப்பினராவதில் அதிமுக தலைவர்கள் அதிருப்தி

சென்னை

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் அதிமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராவதில் அதிமுக தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.  அப்போது பாமக 7 தொகுதிகளிலும், பாஜக 5 தொகுதிகளிலும், தேமுதிக 4 தொகுதிகளிலும், தமாகா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.   தேர்தல் ஒப்பந்தப்படி பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டது.   அதில் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுப்பினரானார்.

வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் தமிழகத்தின் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடிவடைகிறது.   இந்த உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் திமுக 3 உறுப்பினர்களையும் அதிமுக 3 உறுப்பினர்களையும் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.

இதில் திமுக எவ்வித சிக்கலும் இன்றி உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக ஒரு உறுப்பினர் பதவி தேவை எனக் குரல் கொடுத்தது. அக்கட்சியின் துணைச் செயலாளர் எல் கே சுதீஷ் இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து வலியுறுத்தினார்.  அதன் பிறகு பாஜகவும் தங்களுக்கு உறுப்பினர் பதவி வேண்டும் எனக் கேட்கத் தொடங்கியது.    அத்துடன் அதிமுக மூத்த தலைவர்களும் இந்த பதவியை குறி வைத்தனர்.

இவ்வாறு கடந்த சில நாட்களாக இருந்த குழப்பத்துக்கு இடையில் அதிமுக சார்பில் தம்பிதுரை மற்றும் கே பி முனுசாமி ஆகியோரும் கூட்டணிக் கட்சி சார்பில் தமாகா தலைவர் ஜி கே வாசனும் போட்டியிட உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.   இதனால் தேமுதிக,  பாஜக தலைவர்கள் மட்டுமின்றி அதிமுக மூத்த தலைவர்களும்  அதிருப்தி அடைந்துள்ளனர்.

மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கருப்பையா மூப்பனாரின் மகனான ஜி கே வாசன் பாஜக ஆதரவாளர் என்பதால் இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஒரு மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.  மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பு கேட்டவர்களில் அவரும் ஒருவர் ஆவார்.

மேலும் அவர், “அம்மா வாரிசு அரசியலை எப்போதும் ஊக்குவிக்க மாட்டார். ஆனால் இப்போது அதிமுக தொடர்ந்து வாரிசுகளான அன்புமணி ராமதாஸ் மற்றும் ஜீ கே வாசன் போன்றோருக்கு வாய்ப்பு அளித்துள்ளது.  அத்துடன் ஓபிஎஸ் மகனுக்கு மக்களவை உறுப்பினராக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  ஜி கே வாசனை அமைச்சராக்க விரும்பும் பாஜகவின் விருப்பப்படி இது நடந்துள்ள்து” எனத் தெரிவித்துள்ளார்.