எடப்பாடி தேர்தல் பிரசாரத்துக்கு ஆட்களை அழைத்து வந்த மினி லாரி விபத்து: 38பேர் காயம்
விழுப்புரம்:
விழுப்புரத்தில் முதல்வர் எடப்பாடியின் தேர்தல் பிரசாரத்திற்கு பக்கத்து கிராமங்களில் இருந்து அதிமுகவினர் மற்றும் பொதுமக்களை அழைத்து வந்த மினிலாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த லாரியில் பயணம் செய்த 38 பேர் காயமடைந்தனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவியது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து விழுப்புரம் பகுதியில் பிரசாரம் செய்ய வந்தார். எடப்பாடியின் கூட்டத்தில் மக்கள் கூட்டத்தைக் காட்ட, அதிமுகவினர் மினி லாரியில் அரசூரில் இருந்து ஆட்களை கூட்டி வந்தனர்.
அவர்களுடன் திருவெண்ணெய்நல்லூர் உள்ள அரசூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுகவினர் ட்ஙறறும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் ராஜாராமன். கிளை செயலாளர்கள் வெங்கடேசன். ராஜாராமன் உள்பட 38பேர் மினி லாரியில் வந்தனர்.
இந்த மினி லாரி, அரசூரில் இருந்து விழுப்புரம் நோக்கி வரும்போது திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த லாரியில் பயணம் செய்த 38 பேரும் படுகாயமடைந்தனர்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக வினர்களை சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம்.உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.