அதிமுகவின் வாக்கு வங்கி – ஒரு சிறிய அலசல்

இந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில், அதிமுகவின் வாக்குகளை தினகரன் பிரித்துவிடுவார். எனவே, அக்கட்சி கரையேறுவது கடினம் என்று குறிப்பிடுகிறார்கள் பல அரசியல் விமர்சகர்கள்.

சரி, தினகரன் பிரிப்பது இருக்கட்டும். முதலில், அதிமுகவின் அடிப்படை வாக்கு வங்கி எப்படிப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

அதிமுகவின் வலிமை வாய்ந்த வாக்கு வங்கி என்றாலே, மேற்கே கொங்கு வேளாளர்(பெரும்பான்மையோர் ஆதரவு) மற்றும் தெற்கே முக்குலத்தோர்(பெரும்பான்மையோர் ஆதரவு) என்பதையே பலரும் பிரதானமாகப் பேசுகிறார்கள்.

ஆனால், இந்த இரு சமூகங்களின் பெரும்பான்மையோர் தவிர, அதிமுக -வை பெரியளவில் ஆதரிக்கும் வேறு சில சமூகங்களும் உள்ளன என்பதை குறிப்பிட மறந்துவிடுகிறார்கள்.

மேற்கே கொங்கு வேளாளர் மட்டுமல்ல, அதே மேற்கு மாவட்டங்களில் பரவலாக வாழும் தலித் சமூக மக்களில் ஒரு பிரிவினராகிய அருந்ததிய சமூகத்தினரில் பெரும்பான்மையினர், அதிமுகவின் வெறி மிகுந்த ஆதரவாளர்கள் என்பதை மறத்தலாகாது.

கடந்த 1956ம் ஆண்டு மதுரை வீரன் திரைப்படம் வந்ததும் வந்தது; இந்த மக்கள் அதிமுக நிறுவனரை, தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே நினைக்கத் தொடங்கிவிட்டனர். என்னதான், திமுக தலைவர் இவர்களுக்கான உள்ஒதுக்கீட்டை வழங்கினாலும், இவர்களின் ‘இரட்டை இலை’ பற்றை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல.

மேலும், அதே பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் வாழும் போயர் அல்லது ஒட்டர் என அழைக்கப்படும் இன மக்களில் பெரும்பான்மையினரும் அதிமுக ஆதரவாளர்களே.

இந்த 3 சமூகக் கூட்டணிகளே, கொங்கு மண்டலத்தில் அதிமுக கோலோச்சுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறதென்றால், அதை அவ்வளவு எளிதாக நிராகரித்துவிட முடியாது.

மேற்கு பகுதி தவிர, தமிழகம் முழுவதும் பரவலாக அதிமுகவிற்கு ஆதரவளிக்கும் வேறுசில சமூகங்கள் பற்றியும் அலசிவிடலாம்.

மக்கள்தொகை அடிப்படையில், தமிழ்நாட்டின் பெரிய சமூகமாக கருதப்படுவது தலித் சமூகமே. அந்த சமூகத்தின் (குறிப்பாக, தேவேந்திரகுல வேளாளர் மற்றும் அருந்ததியர்) கணிசமான வாக்குகள் எப்போதுமே இரட்டை இலைக்கு கிடைத்து வருகின்றன.

பரமக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சம்பவங்கள் எதிர்மறையாக பேசப்பட்டாலும், தென்மாவட்டங்களின் பெருவாரியான இடங்களில் அதிமுக தொடர்ந்து ஜெயித்து வருவதை கவனிக்க வேண்டும். குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில், அதிமுக தொடர்ந்து செல்வாக்காகவே இருக்கிறது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், தமிழகத்திலுள்ள 44 தனித்தொகுதிகளில், பெரும்பாலான இடங்களை இரட்டை இலைதான் கைப்பற்றியது. மேலும், தமிழகத்தின் சில பகுதிகளில் கணிசமாகவும், ஆங்காங்கே சிதறியும் வாழும் பழங்குடியின மக்களில் பெரும்பான்மையோர் அதிமுக ஆதரவாளர்களே.

கடைசியாக, இன்னொரு இன மக்களையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதுதான் மீனவ மக்கள். படகோட்டி மற்றும் மீனவ நண்பன் போன்ற படங்களில் அதிமுக நிறுவனர் நடித்ததால் வந்த அன்போ என்னவோ, அந்த மக்களில் கணிசமானோர் இரட்டை இலைப் பிரியர்களாகவே உள்ளனர்.

கடந்த 1980களில், எம்.ஜி.ஆர். ஆட்சியில், வால்டர் தேவாரம் தலைமையில் சென்னை மெரினாவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, பல மீனவர்கள் பலியானாலும், இவர்களின் அதிமுக அன்பு குறையவில்லை என்றே கூறலாம்.

ஆக, கொங்குவேளாளர், முக்குலத்தோர், அட்டவணைப் பிரிவினர், பழங்குடியினர், ஒட்டர் போன்ற சில சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் மீனவர் ஆகிய சமூகங்களின் பெரும்பான்மை அல்லது கணிசமான ஆதரவுடன்தான், தமிழகத்தின் பெரிய கட்சியாக அதிமுக இதுவரை திகழ்ந்தது என்ற முடிவிற்கு வர வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

அதேசமயம், இனிவரும் காலங்களில் எப்படி என்பதை காத்திருப்பதன் மூலமே அறிந்துகொள்ள முடியும்.

தன் செல்வாக்கில் பாதிப்பு ஏற்படுமோ என அஞ்சுவதற்கு காரணமான தேமுதிகவை, பண்ருட்டி ராமச்சந்திரன் உதவியுடன் காலிசெய்துவிட்டே சென்றார் ஜெயலலிதா.

– மதுரை மாயாண்டி

Leave a Reply

Your email address will not be published.