சென்னை:

ரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரிதான் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு, டிடிவி தினகரனின் கோரிக்கையை நிராகரித்தது.

மேலும், குக்கர் சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்து உள்ளது.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணை யம் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு ஒதுக்கியது. இதை எதிர்த்து, இரட்டை இலை எங்களுக்கே சொந்தம்  என்றும்,   தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன், சசிகலா தரப்பில் தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து  டில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதி மன்றம் தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கியது சரிதான் என்று கூறி, தேர்தல் ஆணைய  உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்தது.

டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவை  எதிர்த்து டிடிவி தரப்பில் கடந்த 5ந்தேதி  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  அத்துடன் தங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியது.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமை யிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரட்டை இலையை அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரிதான் என்று கூறிய உச்சநீதி மன்றம் டிடிவியின் கோரிக்கையை நிராகரித்தது.

அதைத்தொடர்ந்து குக்கர் சின்னம் கேட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

இதன் காரணமாக டிடிவிக்கு குக்கர் சின்னம் கிடைப்பதற்கும் வாய்ப்பில்லை என்றே தெரிகிறது…