சென்னை,

பாலில் கலப்படம் செய்வதாக பரபரப்பு புகார் கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பால் முகவர் கடிதம் எழுதி உள்ளார்.

தான் அமைச்சர் பொறுப்பேற்ற உடனே பொதுமக்கள், பால் உற்பத்தியாளர்கள், பால் முகவர்கள் என பலரும் தனியார் நிறுவனங்கள் தான் பாலில் ரசாயனம் கலப்படம் செய்கின்றன என தன்னிடம் நேரில் புகார் மனு அளித்ததாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடந்த வாரம் செய்தியாளர்களிடம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதை மறுத்து தமிழ்நாடு பால் முகவர் மற்றும் தொழிலாளர் சங்க தலைவர் பொன்னுசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

“தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய “தமிழக பால்வளத்துறை அமைச்சர்” திரு. ராஜேந்திர பாலாஜி “ஆவின் நிறுவனத்தில் மொத்த விநியோகஸ்தர்கள் முறையே இல்லை” எனவும், தனியார் பால் நிறுவனங்களில் தான் மொத்த விநியோகஸ்தர் முறை பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்கின்றன என்றும் தெரிவித்தார்.

அதோடு,  ஆறு மாதத்திற்கு முன் தான் அமைச்சர் பொறுப்பேற்ற உடனே பொதுமக்கள், பால் உற்பத்தியாளர்கள், பால் முகவர்கள் என பலரும் தனியார் நிறுவனங்கள் தான் பாலில் ரசாயனம் கலப்படம் செய்கின்றன என தன்னிடம் நேரில் புகார் மனு அளித்ததாகவும் தகவலை பதிவு செய்திருக்கிறார்.

உண்மையில் அவ்வாறான புகார்கள் அவருக்கு வந்திருக்குமானால் தமிழகத்தில் ஒட்டுமொத்த பால்வளத்துறை ஆணையராக இருக்கும் திரு. காமராஜ் ஐ.ஏ.எஸ் அவர்களின் தலைமையில் அனைத்து தனியார் பால் நிறுவனங்களின் பால் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கலாம். விசாரணையின் போது அவ்வாறு கலப்படம் செய்வது உறுதி செய்யப்பட்ட பால் நிறுவனங்களை மூடி சீல் வைக்க உத்தரவிட்டிருக்கலாம்.ங

ஆனால் தனக்கு தெரிந்த உண்மையை ஆறு மாத காலமாக மறைத்து உரிய நடவடிக்கை எடுக்கா மல் இருந்து விட்டு மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அதுமட்டுமன்றி இவருக்கு முன்பிருந்த பால்வளத்துறை அமைச்சர்களின் காலத்தில் தனியார் பால் நிறுவனங்கள் மீது கலப்பட புகார் வந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவலை பதிவு செய்திசெய்திருக்கிறார்.

எங்களுக்கு தெரிந்தவரை ஆவின் நிறுவனத்தில் தான் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் சோயா பவுடர், ஜவ்வரிசி ஆகியவற்றை ஆவின் பாலில் கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் பால் வயல்வெளிகளில் கொட்டி அழிக்கப்பட்டதும், மற்றொரு முறை வேலூர் மாவட்டத்தில் ஆவின் பாலில் கேஸ்ட்ரிக் சோடா கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதும் ஊடகங்களில் செய்தியாக வெளி வந்தது.

மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதிமுக பிரமுகர் ஒருவர் ஆவின் பால் ஏற்றி வரும் டேங்கர் லாரிகளில் இருந்து ஆயிரக்கணக்கான லிட்டர் பாலினை எடுத்து விட்டு அதற்கு பதில் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்ததை பொதுமக்கள் அனைவரும் நன்கறிவார்கள்.

இப்படி பல்வேறு காலகட்டங்களில் ஆவின் நிறுவனத்தில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது தான் உறுதி செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த சூழ்நிலையில் தனியார் பால் நிறுவனங்களின் கலப்பட பாலை குடிப்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய் வரும் என்கிற உண்மை தெரிந்திருந்தும் அமைச்சர் அந்நிறுவனங்களின் பெயரை வெளிப்படையாக அறிவித்து, அந்நிறுவனங்களின் பாலினை பொதுமக்கள் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துவதோடு, கலப்பட பாலை குடித்து அதன் காரணமாக ஏற்பட இருக்கும் பேராபத்துகளில் இருந்து பொதுமக்களை காத்திட முயற்சி செய்யாமல் எச்சரிக்கை செய்கிறேன் என்கிற பெயரில் தேவையற்ற அச்சத்தையும், பீதியையும் மட்டுமே மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளார்.

ஒருவேளை கலப்பட பாலை குடித்து குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் என பொதுமக்களின் உயிருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமானால் “மக்களைக் காப்பது தான் அரசின் பணி” என்பதை மறந்து  அமைதி காத்த தமிழக பால்வளத்துறை அமைச்சரே அனைத்து பாதிப்புகளுக்கும் முழு பொறுப்பவார்.

அமைச்சர் கூற்றுப்படி 90நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் பயன்படுத்தும் பாலில் ரசாயனம் கலப்படம் செய்யப்படுகிறது என்றால் அதே வகையான பாலினை ஆவின் நிறுவனமும் உற்பத்தி செய்கிறது. அப்படியானால் ஆவின் நிறுவனமும் பாலில் கலப்படம் செய்கிறது என்பது உண்மை தானே?

எனவே தனியார் பால் நிறுவனங்களின் பாலின் தரத்தினை ஆய்வுக்குட்படுத்தும் போது ஆவின் நிறுவனத்தின் பாலின் தரத்தினை ஆய்வுக்குட்படுத்தி அதனை ஒளிவு மறைவின்றி பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும். அதற்கு தமிழக அரசும், ஆவின் நிறுவனமும் தயாரா? என்பதை அமைச்சர் தெளிவுபடுத்திட வேண்டும்.

மேலும் கடந்த 2010ம் ஆண்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்திற்கு எங்களது சங்கத்தின் சார்பில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டு பெறப்பட்ட தகவலில் 2000ம் ஆண்டு முதலே மொத்த விநியோகஸ்தர்கள் முறை இருப்பதற்கான ஆதாரங்கள் வாயிலாக 32மொத்த விநியோகஸ்தர்கள் சென்னையில் இருப்பதாகவும்,

அதன் பிறகு 2014ம் ஆண்டு கேட்டு பெறப்பட்ட தகவலில் 35மொத்த விநியோகஸ்தர்கள் சென்னையில் இருப்பதாகவும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் (ஆவின் நிர்வாகத்தால்) சார்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 02.06.2016அன்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்திற்கும், 17ஒன்றியங்களுக்கும் எங்களது சங்கத்தின் சார்பில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மீண்டும் கேட்டு பெறப்பட்ட தகவலில் சென்னையில் மொத்த விநியோகஸ்தர்கள் முறை தொடர்ந்து நடைமுறைபடுத்தப்பட்டு வருவதோடு, திருச்சி ஒன்றியத்தில் (2006முதல்) 9பேர்களும், கோவை ஒன்றியத்தில் 3பேர்களும், நெல்லை ஒன்றியத்தில் 3பேர்களும், தஞ்சை ஒன்றியத்தில் (2004முதல்) 4பேர்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் 4பேர்களும், தர்மபுரி ஒன்றியத்தில் ஒருவரும், வேலூர் ஒன்றியத்தில் 9பேர்களும், விழுப்புரம் ஒன்றியத்தில் 6பேர்களும் மொத்த விநியோகஸ்தர்களாக நியமனம் செய்யப்பட்டிருப்பதாக எங்களது சங்கத்தின் கேள்விகளுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்கண்ட ஆவின் ஒன்றிய நிர்வாகத்தின் தரப்பில் இருந்து பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை நிலவரம் இப்படியிருக்க தனியார் பால் நிறுவனங்கள் மட்டும் தான் மொத்த விநியோகஸ்தர்கள் முறையை அமுல்படுத்தி வருவதாகவும், ஆவின் நிறுவனத்தில் இம்முறை அமுலில் இல்லை என்றும் பேசியிருக்கிறார்.

உண்மை நிலவரம் இப்படியிருக்க பொறுப்புமிக்க பால்வளத்துறை அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி அவர்கள் இப்படி உண்மைக்குப் புறம்பான வகையில் பேசியிருப்பதை வைத்து பார்க்கும் போது  ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு பேசியிருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மேலும் துறை சார்ந்த அமைச்சர் ஊடகங்களில் பேசும் போது உண்மை நிலவரத்தை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டு பேசாமல்  மேடையில் பொறுப்பற்ற அரசியல்வாதிகள் பேசுவதைப் போன்று பேசியிருப்பது எங்களது துறை சார்ந்த அமைச்சர் பால்வளம் குறித்து எதுவுமே தெரியாமல் பேசுவது எங்களுக்கெல்லாம் வேதனையாகவும், கவலையாகவும் இருக்கிறது.

மேலும் தனியார் நிறுவனங்களின் பாலில் ரசாயனம் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் அவர்கள் தனியார் பால் நிறுவனங்களின் பால் மாதிரிகள் புனேவில் உள்ள மத்திய அரசின் உணவு தரக்கட்டுப்பாட்டு பரிசோதனைக் கூடத்தில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக தொடர்ந்து ஊடகங்கள் வாயிலாக ஆணித்தரமாக தெரிவித்து வந்தார்.

தற்போது அந்த மாதிரி பாலின் மாதிரிகள் தமிழகத்தில் இருந்து எங்களுக்கு வரவில்லை என அந்த ஆய்வகத்தின் இயக்குனர் தெரிவித்த நிலையில் அதிகாரிகள் அங்கே பாலின் மாதிரிகளை ஆய்விற்கு வாங்க மறுத்ததாக தெரிவித்தது மட்டுமின்றி அரசு அதிகாரிகள் மீதும்,  தனியார் பால் நிறுவனங்கள் மீதும் பழியை போட்டு தான் தப்பித்துக் கொள்கின்ற வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

இப்படி முன்னுக்குப்பின் முரணாக பால்வளத்துறை அமைச்சர் பேசி வருவதில் இருந்து அவர் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை தனியார் பால் நிறுவனங்கள் மீது சுமத்தி, பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறார் என்பதும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு  தனியார் பாலில் ரசாயனம் கலப்படம் தொடர்பான பால்வளத்துறை அமைச்சரின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாகவும், பாலில் கலப்படம் தடுப்பதற்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், தற்போது பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தையும், பீதியையும் போக்கிடும் வண்ணம் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும்,

அவற்றை பொதுமக்கள் மத்தியில் தெளிவுபடுத்திட வேண்டும் எனவும் “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்” சார்பில் தங்களை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்” இவ்வாறு பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.