முன்னாள் ஜெர்மன் பிரதமர் மீது தென் கொரியாவில் பாலியல் வழக்கு பதிவு

சியோல்

முன்னாள் ஜெர்மன் பிரதமர் ஜெர்ஹார்ட் ஸ்கிரோட்ர் மீது தென் கொரியாவில் பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜெர்மன் நாட்டின் பிரதமராக ஜெர்ஹார்ட் ஸ்கிரோடர் கடந்த 1998 முதல் 2005 வரை பதவி வகித்து வந்தார். இவர் ஏற்கனவே நான்கு முறை திருமணமாகி விவாகரத்து செய்துள்ளார். இவர் தென் கொரியாவின் சியோல் நகருக்கு 2015 ஆம் வருடம் ஒரு வர்த்தக கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துக் கொள்ளச் சென்றார். அப்போது அவருக்கு  மொழி பெயர்ப்பாளராக சியோலை சேந்த கிம் பணியாற்றினார். இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து ஸ்கிரோடர் எழுதிய சுயசரிதையை கொரிய மொழியில் மொழி பெயர்க்கும் பணியில் ஈடுபட்ட கிம் உடன் அவருக்குக் காதல் மலர்ந்தது. தற்போது 75 வயதாகும் ஸ்கிரோடர் தன்னை விட 24 வயது குறைவான கிம் மை மணம் புரிந்தார். இதற்கு ஜெர்மன் நாளிதழ்கள் மிகவும் கிண்டல் செய்து செய்திகளை  வெளியிட்டன. கிம் ஏற்கனவே திருமணமானவர்.

கிம் உடைய முதல் கணவர் தற்போது ஸ்கிரோடர் மீது பாலியல் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது வழக்கு மனுவில் கிம் உடன் ஸ்கிரோடர் நெருக்கமாக இருந்த காலத்தில் கிம் தன்னை விவாகரத்து செய்யவில்லை எனவும் கொரிய சட்டப்படி விவாகரத்து ஆகாத பெண்ணுடன் உறவு கொள்வது பாலியல் குற்றம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதையொட்டி ஸ்கிரோட்ருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து கிம் தனக்கும் தனது முதல் கணவருக்கும் மிகச் சிறிய வயதில் திருமணம் நடந்து இருவரும் நீண்ட காலம் முன்பே பிரிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் தாங்கள் இருவரும் பல ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்ததால் அதைக் காரணம் காட்டி விவாகரத்து பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த கேள்விகளுக்கு ஸ்கிரோடர் பதில் அளிக்க மறுத்துள்ளார்.