புழல் சிறையில் கணினி சார்ந்த பூட்டு, சாவி திட்டம் விரைவில் அறிமுகம்

சென்னை:

சென்னை புழல் சிறையில் தீவிரவாதிகள் சொகுசு வாழ்க்கை வாழும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், சென்னை புழல் சிறை வளாகத்தில் கணினி சார்ந்த பூட்டு, சாவி பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெள்ளோட்டமாக அறிமுகம் செய்யப்படும் இந்த திட்டம் பின்னர் இதர சிறைகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் அனைத்து பூட்டு, சாவிகளும் பிரத்யேக தகவல்களுடன் கம்ப்யூட்டரில் ஒருங்கிணைக்கப்பட்ட அடையாளத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். கட்டுப்பாட்டாளர் அனுமதி கொடுத்தால் மட்டுமே பூட்டு, சாவியை இயக்க முடியும். பூட்டுக்கும் சாவிக்கும் உரிய பிரத்யேக அங்கிகாரம் மூலமே திறக்கவோ, பூட்டவோ முடியும். அனுமதியில்லாதவர்கள் பூட்டை திறக்க முடியாது.

பிரத்யேக சாப்ட்வேர் மூலம் இந்த செயல்பாடு நிர்வாகம் செய்யப்படும். சாவி காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ யாராலும் அதை பயன்படுத்த முடியாது. அந்த சாவி நிரந்தரமாக செயலிழக்கச் செய்யும் வசதியும் இதில் உள்ளது. சாவிகள் பராமரிப்பும் எளிது. ஒரு சாவியை கொண்டு பல பூட்டுக்களை திறக்க முடியும். அதற்கு ஏற்ப ப்ரோகிராம் செய்யப்படும். அனைத்து பயன்பாடுகளும் மின்னணு முறையில் பதிவாகும். சுழற்சி முறையில் அவை சர்வரில் சேமிக்கப்படும்.

இதன் மூலம் அன்றாட நடவடிக்கையை அறிக்கையாக பிரின்ட் அவுட் எடுக்கலாம். சிறை அறைகள், சிறை தகவல்கள், சாவிகளை கையாளும் காவலர்கள் குறித்த விபரங்களும் இதில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்திற்காக ப்ரோகிராம் செய்யப்பட்ட 420 பூட்டுக்கள் (மெக்கோடிரானிக்ஸ் பேட்லாக்), 12 ப்ரோகிராமபில் எலக்ட்ரானிக் சாவி, பூட்டு மற்றும் சாவியை இணைக்கும் கருவிகள் 3, சாப்ட்வேர் ஆகியவை கொள்முதல் செய்ய ஆர்டர் போடப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி