டில்லி,

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பாரதியஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி நியமிக்கப்படலாம் என பாரதியஜனதாவின்  டில்லி வட்டாரத்தில் தகவல்கள் உலா வருகிறது.

தற்போதைய ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜி 2012ம் ஆண்டு ஜூலை 25ந்தேதி முதல் இந்தியாவின் 14வது குடியரசு தலைவராக பதவி வகித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர், அப்போதைய காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டவர்.

பிரணாப்பின் பதவி காலம் இந்த ஆண்டு ஜூலை மாதம் முடிவடைய இருக்கிறது. அதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் முடிவில் பாரதியஜனதா ஈடுபட்டுள்ளது.

தற்போது நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் 4 மாநிங்களில் பாரதியஜனதா ஆட்சி அமைத்துள்ளது. இதன் காரணமாக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து, பா.ஜ.கவின் பலம் மேலும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து, வர இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பாரதியஜனதா கட்சியை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தகுதியானவர் முன்னாள் உள்துறை அமைச்சர் அத்வானிதான் என்று பாரதியஜனதா நிர்வாகிகள் கருதுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆனால், அத்வானியோ ஒருசில விசயங்களில் மோடியின் நடவடிக்கை குறித்து விமர்சித்து வந்தவர். ஆகவே, அவர் ஜனாதிபதியாக வருவதை மோடி விரும்பமாட்டார் என்று ஒரு சாரார் கூறி வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக பாரதியஜனதா நிர்வாகிகள் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருவதாக வும், இருந்தாலும் மோடிக்கு அத்வானிமீது தனி மரியாதை உண்டு என்றும், இதுகுறித்து குஜராத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அத்வானி முன்னிலையில் மோடி பேசியதாகவும், தகவல்கள் கூறுகிறது.

இதன் காரணமாக அத்வானிக்கு  ஜனாதிபதி பதவி வழங்கப்படலாம் என்று  டில்லி தாமரை தலைமை அலுவலகத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளதாக தெரிகிறது.