மாலத்தீவில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் இந்தியாவுக்கு சாதகம்….சீனா ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி

டில்லி:

வெள்ளை மணல் பறந்த கடற்கரை, சொகுசு விடுதிகள் ஆகியவற்றுக்கு மாலத்தீவு புகழ்பெற்றது. இந்திய பெருங்கடல் தீவான இங்கு ஆதிக்கம் செலுத்த இந்தியா, சீனாவுக்கு இடையே கடும் போட்டி நிலவும். இந்த வகையில் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.

இந்த முக்கியமான முடிவை 2.34 லட்சம் வாக்களர்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். எதிர்கட்சி வேட்பாளரான இப்ராகிம் முகமது சோலிஹக்கின் வெற்றி இந்தியாவுக்கு திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மாலத்தீவின் இயற்கை வளத்தை பாதிக்கும் வகையில் சீனா அங்கு பெல்ட் அண்டு ரோடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

மாலத்தீவில் இந்த அரசியல் மாற்றம் ஏற்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் சோலிஹ், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு, மாலத்தீவு இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இது டில்லிக்கு இனிப்பு சாப்பிட்டது போல் அமைந்திருந்தது. கடந்த பிப்ரவரியில் அவசர நிலையை பிரகடனம் செய்த யாமீன், எதிர்கட்சி தலைவர்களை வீட்டு காவலில் வைத்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு தனது அரசியல் எதிரிகளை பழிதீர்த்தார்.

தற்போது மாலத்தீவில் எதிர்கட்சி வெற்றி பெற்றிருப்பது இந்தியாவின் பொறுமைக்கு கிடைத்த வெற்றியாகும் என்று சர்வதேச பாதுகாப்பு பிரச்னைகளின் வல்லுனர் பிரம்மா செல்லனே தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், ‘‘மாலத்தீவில் ஏற்பட்ட பிரச்னையில் இந்தியா தலையிட வேண்டும் என்று அப்போது எதிர்கட்சிகள் அழுத்தம் கொடுத்தன. ஆனால், இந்தியா உஷாராக இருந்து கொண்டது. இந்தியா தலையிட்டிருந்தால் தற்போதைய தேர்தல் முடிவு இவ்வாறு அமைந்திருக்காது. உள்நாட்டு பிரச்னையில் வெளிநாடு தலையிடுவதை எந்த மக்களும் ஏற்கமாட்டார்கள்’’ என்றார்.

மாலத்தீவு கடற்பகுதி வழியாக இந்தியாவின் கப்பல்கள் பல கடந்து சென்று வருகின்றன. அதோடு மாலத்தீவில் இருந்து 70 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இந்தியாவின் லட்சத்தீவு அமைந்துள்ளது. இங்கு இந்தியாவின் விமானப்படை தளம் அமைந்துள்ளது. பாரம்பரியாக இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த உறவு 2012ம் ஆண்டுக்கு பின்னர் பாதிக்கப்பட்டது. மாலத்தீவு அதிபராக முகமது நாசீத் வெற்றி பெற்றவுடன், பழைய முறைகளை மாற்றி அமைக்க முடிவு செய்தது தான் இதற்கு காரணமாக அமைந்துவிட்டது.

2013ம் ஆண்டு முதல் பதவியில் இருந்த யாமீன் இந்தியாவுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் இருந்தார். 2016ம் ஆண்டில் கடற்பாதுகாப்பை விரிவுபடுத்தும் திட்டத்துக்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால், அவர் சீனாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். வர்த்தகத்திற்காக மாலத்தீவு விமானநிலையத்தில் இருந்து தலைநகருக்கு 2 கி.மீ., பாலத்தை சீனா கட்டியது. அதோடு நீண்ட நாள் குத்தகைக்கு மாலத்தீவின் குட்டி தீவுகளை சீனா கைப்பற்றியது. அவ்வாறு குத்தகைக்கு எடுத்த ஒரு தீவை ராணுவ தளமாக மாற்ற சீனா திட்டமிட்டிருந்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு கடற்வழி அச்சுறுத்தலை கொடுக்க சீனா நினைத்திருந்தது.

2017ம் ஆண்டு சீனாவின் 3 போர் கப்பல்கள் மாலத்தீவு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. இது இந்தியாவை விழிக்கச் செய்து எதிர்கட்சிகளுடன் தொடர்பபை ஏற்படுத்திக் கொள்ள உந்துதலாக அமைந்தது. 45 நாட்கள் அமலில் இருந்த அவசர நிலையின் போது இந்தியாவுக்கு எதிரான பல நடவடிக்கைகளை யாமீன் அரசு மேற்கொண்டது. டாக்டர், ஆசிரியர், ஓட்டல் தொழிலாளர்கள் என 25 ஆயிரம் இந்தியர்களுக்கு விசா புதுப்பிக்கவும், வழங்கவும் மறுத்துவிட்டது.

மனிதாபினமான செயல்களுக்காக வழங்கப்பட்டிருந்த இந்தியாவின் 2 ஹெலிகாப்டர்கள் மற்றும், 48 இந்திய பைலட்கள், பொறியாளர்களை திரும்ப பெற்றுக் கொள்ள உத்தரவிடப்பட்டது. இந்தியா மற்றும் இந்திய நலனுக்கு எதிரான நடவடிக்கைக¬ள் தெளிவாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தான் மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் இந்தியாவுக்கு பரிசாக அமைந்துள்ளது. இது வலுவான தகவலாகவும் அமைந்துள்ளது என்று இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.