திருச்சி:

திருச்சி அருகே தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று கட்டி விற்கப்பட்டு உள்ள பிளாட்டுகளை பிராமணர்களுக்கு மட்டுமே விற்பனை செய்வதாக அறிவித்து உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (Tamil Nadu Untouchability Front (TNUEF), போர்க்கொடி தூக்கி உள்ளது.

திருச்சியைச் சேர்ந்த ஓம்சக்தி கண்ஸ்ட்ரக்சன் என்ற கட்டுமான நிறுவனம், திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் சாலையில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் கட்டி விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த அடுக்குமாடி வீடுகள் பிராமணர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று அறிவித்து உள்ளது.

தலித்கள், மைனாட்டி வகுப்பினருக்கு வீடுகள் விற்பனை செய்யமாட்டோம் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வினோத் மணி, இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.  இதுகுறித்து கருத்து தெரிவித்த வினோத்மணி,  நாங்கள் சாதியற்ற சமுதாயத்தை நோக்கி நகரும்போது, ​​கட்டுமான நிறுவனத்தின் இந்த அறிவிப்பு சாதி அமைப்பை ஆதரிக்கிறது. இதுபோன்ற வெளிப்படையான அறிவிப்பு சாதி மற்றும் மதத்தால் ஏற்கனவே பிளவுபட்டுள்ள அமைப்பில் தவறான முன்னுதாரணத்தை அமைக்கும் என்றார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கட்டுமான நிறுவனம்,  “நாங்கள் குடியிருப்புகள் சைவ உணவு உண்பவர்களுக்கு மட்டுமே விற்கப்படும் என்று அறிவிக்க திட்டமிட்டோம். ஆனால், அது அச்சில் பிராமணர்கள் தவறாக  பிரிண்டாகி உள்ளது.  உண்மையில், நாங்கள் எந்த சாதிக்கும் மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல ”என்று  கூறி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், திருச்சி கார்ப்பரேஷனின் தலைமை பொறி யாளரை சந்தித்து, ஒரு சமூகத்திற்கு மட்டும் என  பிளாட் கட்டுவதற்கு  எவ்வாறு அனுமதி அளித்தார்கள் என்று கேட்கப்பட்ட தாகவும்,  பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (அட்டூழியங்களைத் தடுப்பது) சட்டத்தின் கீழ் கட்டடம் கட்டியவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும்  ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபோல பல கட்டுமான நிறுவனங்கள், தங்களது சாதியினருக்கு மட்டுமே வீடுகளை கட்டிக்கொடுப்பது தொடர்ந்து வருகிறது. சென்னை போன்ற நகரங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்த ஜெயின் சமூகத்தினர் கட்டும் அடுக்குமாடி குடியிருப்புகள் அவர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. வேறு யாருக்கும் விற்பனை செய்யப்படதாத நிலையே நீடித்து வருகிறது.