பிரஷாந்த் கிஷோர் அறிவுரை.. அதிரடியில் இறங்கிய மம்தா..

பிரஷாந்த் கிஷோர் அறிவுரை.. அதிரடியில் இறங்கிய மம்தா..

மே.வங்க மாநிலத்தில் இடதுசாரிகளைக் கிட்டத்தட்டத் துடைத்தெறிந்து விட்ட அந்த மாநில முதல்-அமைச்சரும், திரினாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பா.ஜ.க.வின் எழுச்சியை நிச்சயமாக எதிர்பார்த்திருக்க மாட்டார்.

கடந்த மக்களவை தேர்தலில் அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 42 எம்.பி. தொகுதிகளில் ஆளும்  திரினாமூல் காங்கிரஸ் 22 இடங்களில் மட்டுமே வென்றது.

பா.ஜ.க. 18 தொகுதிகளை அள்ளியது.

அந்த கட்சியினரே எதிர்பார்க்காத வெற்றி இது.

அடுத்த ஆண்டு மே.வங்க மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரை, தங்கள் பக்கம் இழுத்து வந்தது, திரினாமூல் காங்கிரஸ் கட்சி.

கடந்த ஓர் ஆண்டு காலமாக பிரஷாந்த் கிஷோர் தலைமையிலான  குழு மாநிலம் முழுக்க சென்று சர்வே நடத்தி மம்தாவிடம் அறிக்கை  அளித்துள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த சில ஆலோசனைகளை ஏற்று, மம்தா பானர்ஜி நேற்று கட்சிக்குள் அதிரடி மாற்றங்களை செய்துள்ளார்.

பழம் பெருச்சாளிகளின் பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளன.

மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் இளைஞர்களுக்குப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன..

சத்திரதார் மகாதோ என்பவருக்குக் கட்சியில்  மாநிலச் செயலாளர்  பதவி கொடுக்கப்பட்டிருப்பது, பா.ஜ.க. வை அதிற வைத்துள்ளது.

ஏன்?

பழங்குடியின மக்கள் பெருமளவில் வசிக்கும் ஜங்கள் மகால் பகுதியில் இவருக்குத் தனி செல்வாக்கு உண்டு.

மாவோயிஸ்ட் ஆதரவாளராக இருந்த இவர் இடது சாரிகள் ஆட்சியில் போலீஸ் அடக்குமுறைக்கு எதிராக ஒரு இயக்கமே நடத்தி வந்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மகாதோவுக்கு, கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர் அந்த தண்டனையைக் கொல்கத்தா உயர் நீதிமன்றம் 10 ஆண்டுகளாகக் குறைத்தது. கடந்த ஆண்டு மகாதோ சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

மகாதோ ’கட்டுப்பாட்டில்’ உள்ள ஜங்கள் மகால் ஏரியாவில் கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க., அனைத்து தொகுதிகளிலும் , அதாவது -புருலியா உள்ளிட்ட ஐந்து  எம்.பி.தொகுதிகளிலும்  வென்றது.

இந்த முறை அந்த ஓட்டுகளும், பழங்குடியின மக்கள் வசிக்கும் எஞ்சிய இடங்களில் உள்ள ஓட்டுகளும் மகாதோ மூலமாக, திரினாமூல் காங்கிரஸ் கட்சிக்கு மடை மாற்றம் செய்யப்படும் என்பதால், பா.ஜ.க. அரண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

-பா.பாரதி.