சென்னை: ஆட்டோமொபைல் துறைக்கு எந்த ஜிஎஸ்டி குறைப்பு சலுகையும் தேவையில்லை என்றும், இப்போதைய சரிவுக்கு காரணம் அத்தொழில் துறையினரின் தவறான திட்டமிடுதல்கள்தான் என்றும் கூறியுள்ளார் இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன்.

இதன்மூலம், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜிவ் பஜாஜ் கூறியுள்ள கருத்தையே இவரும் ஆதரித்துப் பேசியுள்ளார்.

செப்டம்பர் மாதம் 20ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஆட்டோமொபைல் தொழில்துறைக்கு விதிக்கப்பட்டுவரும் 28% வரியை 18% என்ற அளவில் குறைக்குமாறு ஆட்டோமொபைல் தொழில்துறையினர் லாபி செய்து வருகின்றனர்.

ஸ்ரீனிவாசன் கூறியதாவது, “ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது வாகன விற்பனையை அதிகரித்துவிடாது. சிக்கல் என்பது இன்னும் ஆழமானது. எங்களையேப் பாருங்களேன். தென்னிந்தியாவில் எங்களின் சொந்த பிளான்ட்டுகளை நாங்கள் 2 நாட்களுக்கு ஒருமுறை இயக்கிக்கொண்டு கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வருகிறோம்.

சிமெண்டிற்கும் 28% ஜிஎஸ்டி வரிதான் விதிக்கப்படுகிறது. எனவே, அதற்கேற்ப எங்களுடைய தொழிலின் போக்கை மாற்றிக்கொண்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறோம். நாங்கள் வரி குறைப்புக்காக எப்போதுமே அரசை கேட்டதில்லை. சில பத்தாண்டுகளாக வளர்ச்சியடைந்த ஆட்டோமொபைல் துறையில், சில மாதங்களாக ஏற்பட்ட சரிவுக்காக ஜிஎஸ்டி வரிக்குறைப்பு கேட்கின்றனர்” என்றார் அவர்.